மெட்ரோ ரயிலுக்காக காவு கொடுக்கப்படுகிறதா சென்னையின் காடுகள்?
நன்மங்கலம் வெப்பமண்டல உலர் பசுமைக்காடு வகை (Tropical dry evergreen forest). இதில்தான் அதிக அளவிலான மருந்துச் செடிகள் வளரும். நாட்டிலேயே ஒட்டுமொத்தமாக இவை 0.2 சதவிகிதம்தான் உள்ளன.
நகர்ப்புறக் காடுகள் (Urban Forests) என்பது மனிதர்களால் பாதிக்கப்பட்ட பல்லுயிர்க் கட்டமைப்பை மீட்டெடுப்பதற்கான பரிகாரம். ஐ.டி. நிறுவனங்கள், ஏரிகளை ஆக்கிரமித்து எழுப்பப்படும் அபார்ட்மெண்ட்கள், மெட்ரோ போக்குவரத்துகள், மக்கள் நெருக்கடி என மூச்சுவிடுவதற்கு திணறும் சென்னைக்கு அதன் நுரையீரலாக இருந்து வருபவை கிண்டி தேசியப்பூங்காவும் நன்மங்கலம் காப்புக் காடுகளும்தான் (Nanmangalam Reserve Forests). தற்போது சென்னை மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கப் பணிகளால் சென்னையின் இந்த நுரையீரல் நசுக்கப்படும் அபாயத்தில் இருக்கிறது.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட விரிவாக்கப் பணிகளின் கீழ் மாதவரம் பால் பண்ணை தொடங்கி ஈச்சங்காடு, மேடவாக்கம் வழியாக எல்காட் வரையிலான இருப்புப்பாதை ஐந்துக்கான விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட இருக்கின்றன. இந்த விரிவாக்கத்தை நன்மங்கலம் பாதுகாக்கப்பட்ட காடுகள் வழியாகச் செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசிடம் விண்ணப்பம் அளித்துள்ளது.
விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருப்பது என்ன?
மெட்ரோ ரயில் நிறுவன சுற்றுச்சூழல் நிபுணர் பிரேம்நாத் அனுப்பியிருக்கும் இந்த விண்ணப்பத்தில் ‘பெரும்பாலான மெட்ரோ ரயில் பாதைகள் வேறொரு போக்குவரத்தின் ஊடாக முன்னதாகச் செல்வதற்குத் (Right Of way) தகுதியான இடத்தில்தான் கட்டமைக்கப்படும். இருப்பினும் மேடவாக்கம் பகுதியில் மேடவாக்கம் கூட்டுரோட்டை ஒட்டிய வெள்ளக்கலில் இந்த ஊடுபாதை கிட்டத்தட்ட 8 முதல் 9 மீட்டர் வரை குறைவாக இருப்பதால், இதில் இருப்புப்பாதையும் ரயில் நிலையமும் கட்டமைப்பது சாத்தியப்படாது. இதனை நெடுஞ்சாலைத்துறையும் உறுதிசெய்துள்ளது. இதற்கு ஒரே தீர்வு, நன்மங்கலம் பாதுகாக்கப்பட்ட காடுகளில் துண்டு நிலத்தின் வழியாக இந்தப் பாதையை கட்டமைப்பதுதான். கூடவே மேடவாக்கம் கூட்டு ரோட்டுப் பகுதியில் ரயில் நிலையம் கட்டமைப்பதற்கான தேவையும் இருப்பதால் தேவைகருதி அங்கே 3.79 ஏக்கர் நிலம் ஒதுக்கவேண்டும்’ எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மக்கள் அதிகம் வாழும் பகுதியான மேடவாக்கம், சோழிங்கநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த மெட்ரோ ரயில் நிலைய வருகை கணிசமாகவே போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும். ஆனால் மெட்ரோ ரயில் போக்குவரத்துக்காகப் பாதுகாக்கப்பட்டக் காடுகளின் நிலத்தை ஆக்கிரமிக்க வேண்டும் என்கிற இந்தக் கோரிக்கை சூழலியலாளர்களைக் கவலைகொள்ள செய்திருக்கிறது.
நன்மங்கலம் காடுகளுக்குப் பக்கத்தில்தான் தமிழ்நாடு அரசின் பல்லுயிர் மேலாண்மை வாரியத்துடைய அலுவலகமும் இருக்கிறது
இதுபற்றிக் சூழலியலாளரும் பறவைகள் ஆர்வலருமான யுவன் கூறுகையில், “200 வருடங்களுக்கு முன்பு வண்டலூர் தாம்பரம் நன்மங்கலம் முழுக்கக் காடுகள்தான் இருந்தன. சென்னை டெல்லி மாதிரியான நகரமாக மாறிவிடாமல், காப்பாற்றப்படுவதற்கு எஞ்சியிருக்கும் நுரையீரல் பகுதிதான் நன்மங்கலம் காடுகள். அங்கே அமைந்திருக்கும் ஏரி, அந்தப் பகுதியின் மிகப்பெரும் நீர்ப்பிடிப்பு பகுதியாக உள்ளது. 440-க்கும் மேற்பட்ட பூக்கள் மற்றும் செடி வகைகள் அங்கே இருப்பதாக Care Earth என்னும் அமைப்பின் ஆய்வுகள் சொல்கின்றன. இதுதவிர 140 வகையான உயிரனங்கள் அந்தக் காட்டில் வசிக்கின்றன. இங்கிருக்கும் பறவைகள், பட்டாம்பூச்சிகள் பற்றி அறிய மக்கள் ஆர்வம் காட்டுவதால், அதற்கான வகுப்புகள் இங்கே தொடர்ச்சியாக ஒருங்கிணைக்கப்படுகின்றன. முக்கியமாக அழிந்துவரும் உயிரினமான இந்தியக் கழுகு, ஆந்தை ஆகிய பறவைகள் அனைத்தும், இந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில்தான் இனப்பெருக்கம் செய்கின்றன. இவை இரைதேடிக் கொல்லும் வகை உயிரனங்களில் முன்னணியில் இருப்பவை (Top Predators). மெட்ரோ ரயில் கட்டுமானத்தால் இந்த இனப்பெருக்கம் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. மேலும், அந்தக் காடுகளில் 3.7 ஏக்கர் (1.5 ஹெக்டேர்) நிலம் மட்டும்தான் தேவைப்படுவதாக மெட்ரோ நிறுவனம் சொல்லியிருக்கிறது. ஆனால் அந்த இடத்தில் கட்டுமானம் வந்தால் நன்மங்கலம் காடுகள் உட்படச் சுற்றுப்பகுதிகள் மழைக்காலத்தில் வெள்ளக்காடாக நிரம்பி வழியும்” என்கிறார்.
முரணாக நன்மங்கலம் காடுகளுக்குப் பக்கத்தில்தான் தமிழ்நாடு அரசின் பல்லுயிர் மேலாண்மை வாரியத்துடைய அலுவலகமும் இருக்கிறது,
கல்விநிறுவனங்களின் ஆக்கிரமிப்பு மற்றும் மக்கள் தேவைக்காக உறிஞ்சப்படும் குவாரி என பல நெருக்கடிகளில் இருந்து காப்பாற்றி இந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை வாரியம்தான் பராமரித்து வருகிறது. கல்விநிறுவனம் ஆக்கிரமித்த இடங்களில் தற்போதுக் கூடுதலாக மரம் நடும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்தக் காடுகளுக்கிடையே தற்போது மெட்ரோ ரயில்பாதைக்கான கோரிக்கை வைக்கப்பட்டிருக்கும் நிலையில் வாரியத்தின் நிலைப்பாடு என்ன?
வாரியத்தின் உறுப்பினரும் நன்மங்கலம் காடுகள் ஆய்வாளருமான பேராசிரியர் நரசிம்மனைத் தொடர்புகொண்டு பேசினோம், “நன்மங்கலம் வெப்பமண்டல உலர் பசுமைக்காடு வகை (Tropical dry evergreen forest). இதில்தான் அதிக அளவிலான மருந்துச் செடிகள் வளரும். நாட்டிலேயே ஒட்டுமொத்தமாக இவை 0.2 சதவிகிதம்தான் உள்ளன. இந்தக் குறைந்த சதவிகிதத்தில்தான் இவர்கள் மூன்று ஏக்கர் நிலத்தைக் கேட்கிறார்கள். வளர்ச்சி முக்கியம்தான் அதற்காக ஏற்கெனவே இருக்கும் காட்டை பாதிக்க வேண்டுமா? மெட்ரோ ரயிலின் விண்ணப்பம் எப்படியும் வனத்துறை மற்றும் வாரியத்தின் பார்வைக்கு வரும் அப்போது இதுகுறித்த எங்களது முடிவைத் தெரிவிப்போம் ” என்றார்.
காடுகளா? மெட்ரோ ரயிலா? அரசின் முடிவுக்குக் காத்திருப்போம்!