'அந்த' வார்த்தையை பயன்படுத்திய ஸ்டாலின்! அதகளம் செய்த அதிமுக! ரணகளமான பேரவை!
சட்டப்பேரவையில் மாணியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றி வருகிறார்.

சட்டப்பேரவையில் மாணியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றி வருகிறார்.
அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், “கடந்த ஆட்சியில் அரசின் நிர்வாகம் ஊர்ந்து சென்று கட்டாந்தரையில் கிடந்தது. திமுக ஆட்சியில் அதை தலை நிமிர செய்துள்ளது” எனத் தெரிவித்தார்.
உடனே அதிமுகவினர் ஊர்ந்து என்ற வார்த்தை நீக்க கோரி அமளியில் ஈடுபட்டனர். பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் இபிஎஸ் மட்டும் கலந்து கொள்ளவில்லை.
இந்த நேரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அந்த வார்த்தையை பயன்படுத்தியது அதிமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து விளக்கமளித்த முதலமைச்சர் ஸ்டாலின், “ஊர்ந்து என்று நான் யாரையும் குறிப்பிடவில்லை. நீங்கள் யாரையாவது எடுத்துக்கொண்டால் நான் என்ன செய்ய முடியும். தமிழ்நாட்டுக்காக, தமிழர்களுக்காக, மாநில உரிமைகளுக்காக எனது பயணம் தொடரும். திட்டங்கள் ஸ்டாலின் பெயரை அல்ல; திராவிட மாடல் ஆட்சியின் பெயரை சொல்லும்.
இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசின் பார்ட் 1 தான். 2026ஆம் ஆண்டில் திராவிட மாடல் அரசின் வெர்ஷன் 2.0 லோடிங். இந்தியாவில் எந்த மாநிலமும் செய்யாத சாதனையை தமிழ்நாடு செய்துள்ளது. 2024-2025ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 9.1 விழுக்காடு அடைந்துள்ளது தமிழ்நாடு. பல்வேறு துறையில் இறுதி இடத்தில் இருந்த தமிழ்நாடு முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது” எனத் தெரிவித்தார்.
முன்னதாக கடந்த அதிமுக ஆட்சியின்போது ஜெயலலிதா உயிரிழந்தார். அப்போது அடுத்த முதலமைச்சர் யார் என்ற குழப்பம் அதிமுகவில் நிகழ்ந்தது. அப்போது வழக்கம்போல் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான பன்னீர் செல்வமே முதலமைச்சராக பதவியேற்றார்.
ஆனால் சசிகலா முதலமைச்சராக ஆசைப்பட்டதால் பன்னீர்செல்வத்தை வழுக்கட்டாயமாக பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வைத்தனர். அதற்கு அப்போதைய அமைச்சர்களும் உடந்தையாக இருந்தனர்.
இதையடுத்து பன்னீர்செல்வம் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தர்மயுத்தத்தில் இறங்கினார். மறுபுறம் சசிகலா முதலமைசராக இருந்த சமயத்தில் சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார். அப்போது சசிகலா கைகாட்டியவர்தான் இபிஎஸ்.
சசிகலா முதலமைசராக இபிஎஸ்சை அடையாளப்படுத்தியதும் சசிகலா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார் இபிஎஸ். ஆனால் அதன்பின்பு ஒபிஎஸ்சுடன் சேர்ந்து சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கினார் இபிஎஸ். பின்னர் ஓபிஎஸ்சையும் கட்சியில் இருந்து நீக்கினார்.
இதைத்தொடர்ந்து யார் காலிலும் விழுந்து ஆட்சிக்கு வந்தவன் நான் அல்ல என இபிஎஸ் மார்தட்டுவதும் அதை திமுகவினர் விமர்சிப்பதும் வாடிக்கையான ஒன்றுதான்.
இந்நிலையில்தான் சட்டப்பேரவையில் இதுபோன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.






















