CM Stalin America: அமெரிக்கா புறப்படும் முதலமைச்சர் ஸ்டாலின் - எத்தனை நாள் பயணம்? திட்டம் என்ன? பொறுப்பில் உதயநிதி?
CM Stalin America: தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா பயணிக்க உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![CM Stalin America: அமெரிக்கா புறப்படும் முதலமைச்சர் ஸ்டாலின் - எத்தனை நாள் பயணம்? திட்டம் என்ன? பொறுப்பில் உதயநிதி? cm stalin set to go america to get investments for tamilnadu will udhayandhi act as interim power house CM Stalin America: அமெரிக்கா புறப்படும் முதலமைச்சர் ஸ்டாலின் - எத்தனை நாள் பயணம்? திட்டம் என்ன? பொறுப்பில் உதயநிதி?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/13/0841fb5eedb26a9f790048beda7e99f11720840187698732_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
CM Stalin America: முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா செல்லும் நேரத்தில், அமைச்சர் உதயநிதி அதிகார மையமாக செயல்படுவார் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா பயணம்:
தமிழ்நாட்டிற்கான முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதலமைச்சர் ஸ்டாலின், அமெரிக்கா செல்லவிருப்பதாக எற்கனவே சட்டமன்றத்தில் தொழில்வள அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்து இருந்தார். இந்நிலையில், வரும் 23ம் தேதி நடைபெற உள்ள மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் நிறைவடந்ததுமே, ஸ்டாலின் வெளிநாடு புறப்படுவார் என கூறப்படுகிறது. அதன்படி, ஜூலை 23 அல்லது ஜூலை 27ஆம் தேதி ஸ்டாலின் அமெரிக்கா புறப்படலாம்.
ஸ்டாலின் ஒருமாத பயணமா?
முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்காவிற்கு செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துவிட்டதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, முதலமைச்சரின் பயணம் சுமார் ஒரு மாதம் வரை நீடிக்கும் என கூறப்படுகிறது. தலைமை செயலாளர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட முக்கிய அதிகாரிகள் முதலமைச்சர் உடன் பயணிக்க இருக்கின்றனர். பல்வேறு தொழில்நிறுவனங்களைச் சேர்ந்த தலைமை நிர்வாகிகளை சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுப்பார் என தெரிகிறது. அதோடு, முதலமைச்சர் தனது உடல்நலன் தொடர்பான மருத்துவ பரிசோதனைகளையும் மேற்கொள்வார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு அரசின் இலக்கு என்ன?
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்துவதே இலக்கு என, முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருகிறார். இதற்காகவே பெரியளவிலான முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். உதாரணமாக, 2022ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு சென்று ரூ.6100 கோடி முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வந்தன. இதன்மூலம் 15100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. 2023ஆம் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கும், கடந்த ஜனவரி - பிப்ரவரி மாதம் ஸ்பெயின் நாட்டிற்கும் சென்று தொழில் முதலீடுகளை ஈர்த்தார். இதனிடையே, சென்னையில் உலக தொழிலாளர் முதலீட்டாளர் மாநாட்டையும் தமிழக அரசு நடத்தியது. இதன் அடுத்தகட்டமாக தான், முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்க செல்லவிருக்கிறார்.
ஸ்டாலின் அதிரடி நடவடிக்கைகள்:
தமிழ்நாட்டில் வலுவான உட்கட்டமைப்பு வசதிகள் இருப்பதும், சட்ட-ஒழுங்கு மேலோங்கி நின்று அமைதிப் பூங்காவாக இருப்பதுமே முதலீட்டாளர்களை ஈர்க்கும் பிரதான காரணிகளாகும். ஆனால் அண்மை காலங்களாக நிகழும் படுகொலை சம்பவங்கள் அந்த எண்ணத்தை மாற்றியுள்ளன. குறிப்பாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள், ஆம்ஸ்ட்ராங் படுகொலை போன்றவை சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டு இருப்பதை வெளிக்காட்டுவதாக எதிர்க்கட்சிகள் சாடி வருகின்றன. இந்த சூழலில் தான் பல்வேறு காவல்துறை உயரதிகார்ளை பணியிடமாற்றம் செய்த தமிழக அரசு, நிர்வாக ரீதியான மாற்றங்களிலும் ஈடுபட்டுள்ளது. முதலமைச்சரும் சட்ட-ஒழுங்கு தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளார். இதன் மூலம் ரவுடிகளை கட்டுப்படுத்தி, சட்ட-ஒழுங்கை நிலைநாட்டுவதில் அடுத்த சில தினங்களில் பல அதிரடி நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொள்ளும் என கூறப்படுகிறது.
அமைச்சரவை மாற்றம்? பொறுப்பில் உதயநிதி?
முதலமைச்சரின் ஒவ்வொரு வெளிநாட்டு பயணத்தின் போதும் அமைச்சரவை மாற்றம் தொடர்பான தகவல்கள் வெளியாவது வழக்கமாக உள்ளது. இந்த முறையும் அதற்கான முகாந்திரம் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், உத்திரவாதமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அதேநேரம், முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்காவில் இருக்கும் கால கட்டத்தில், ஆட்சி மற்றும் கட்சியில் அமைச்சர் உதயநிதி அதிகார மையமாக செயல்படுவார் என அறிவாலயம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)