CM Stalin : மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1,500 ஆக உயர்வு - முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1,000-லிருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1,000-லிருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை கொண்டாடுவதற்கு ஏதுவாக சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்படி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருபத்தூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு நடமாடும் மறுவாழ்வு சிசிக்சை வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து துவங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து, 20க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளை வழங்கி அவர்களுடன் கலந்துரையாடினார். மேலும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தக்கூடிய நவீன உதவி உபகரணங்களுக்கான கண்காட்சியையும் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். குறிப்பாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 100 மாற்றுத்திறனாளிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.
"திறனாளிகளாக மாற்ற வேண்டும்"
இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடையில் பேசினார். அதில் அவர் கூறியதாவது, " மாற்றுத்திறனாளிகள் என்று அவர்களுக்கு ஒரு புதிய பெயரை கொடுத்து, புதிய நம்பிக்கையை உருவாக்கியவர் தான் கருணாநிதி. ஊனமுற்றோர் என்று சொல்லக்கூடாது என்பதற்காக கலைஞர் மாற்றுத்திறனாளிகள் என்ற பெயரை உருவாக்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கேன தனித்துறை உருவாக்கிய பெருமை அவரையே சேரும்” என்று பேசினார்.
மேலும், அவர் கூறியதாவது, அனைவரையும் திறனாளிகளாக மாற்ற வேண்டும் என திமுக அரசு செயல்பட்டு வருகிறது. ஒரு மாற்றுத்திறனாளி கூடு வருத்தப்பட கூடாது என்ற நோக்கத்தில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. ஒரே ஒருவருக்கு என்றாலும் அது நம்மை பயக்கும் என்றால் அந்த செயலை நாம் செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.
"அனைத்து வசதிகளையும் பெற வேண்டும்"
சமூகத்தில் மற்ற தரப்பினர் பெறக்கூடிய அனைத்து வசதிகளையும் மாற்றுத்திறனாளிகளும் பெற வேண்டும். அவர்களுக்கு எந்த குறையும் இல்லாதப்படி பார்ப்பதே இந்த அரசின் நோக்கம். மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள அன்பு பாதையால் கிடைக்கும் நன்மை, மகிழ்வும் எத்தனை கோடி கிடைத்தாலும் கிடைக்காது" என்று பேசினார்.
"வல்லுநர் குழு"
மாற்றுத்திறனாளிகள் முடங்கி இருந்த காலம் மாறி வெளியே சென்று வேலை செய்கிறார்கள். இதனால் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கித் தர வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உதவித்தொகை உயர்வு
இதை தொடர்ந்து பேசிய அவர், "மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை ரூ.1,000-லிருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்றவர்கள் உள்பட அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித் தொகை ரூ.1,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழகத்தில் 4,39,315 மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றியமைக்கப்பட்ட உதவித்தொகை வழங்கப்படும் என்றார்.