Stalin Slams Modi: “RSS; பிரதமரே அஞ்சல் தலையும் நினைவு நாணயமும் வெளியிடும் அவல நிலை“: மோடியை சாடிய டாடி
மகாத்மா காந்தியின் பிறந்தநாளை ஒட்டி அவரது உருவப் படத்திற்கு மரியாதை செலுத்திய புகைப்படத்தை பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடியை விமர்சித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மகாத்மா காந்தியடிகளின் 157-வது பிறந்த நாள் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற்ற உத்தமர் காந்தியடிகளின் 157-வது பிறந்த நாள் நிகழ்ச்சியின்போது, எழும்பூரில் உள்ள அருங்காட்சியக வளாகத்தில் காந்தியின் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் ஸ்டாலின். அந்த புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர், பிரதமர் மோடியை கடுமையாக சாடியுள்ளார். அவரது பதிவில் என்ன கூறியுள்ளார் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
“RSS; பிரதமரே அஞ்சல் தலையும் நினைவு நாணயமும் வெளியிடும் அவல நிலை“
இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “நமது இந்தியா, அனைத்து மத மக்களுக்குமான மதச்சார்பற்ற நாடு எனும் அடிப்படைத் தத்துவத்திற்கு வித்திட்டவர் அண்ணல் காந்தியடிகள்!“ என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “மக்களிடையே வெறுப்பின் விதைகள் தூவப்பட்டு, பிரித்தாளும் சக்திகள் தலைதூக்கும் போதெல்லாம் அவற்றை எதிர்கொள்ளும் வலிமையை நமக்கு என்றும் வழங்கும் ஆற்றல் அவர்“ என புகழாரம் சூட்டியுள்ளார்.
அதோடு, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்திருக்கும் அவர், “நம் தேசப்பிதாவைக் கொன்றொழித்த மதவாதியின் கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நூற்றாண்டுக்கு, நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரே அஞ்சல் தலையும் நினைவு நாணயமும் வெளியிடும் அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும்! இதுவே காந்தியடிகளின் பிறந்தநாளில் நாட்டு மக்கள் அனைவரும் ஏற்கவேண்டிய உறுதிமொழி!“ என கூறியுள்ளார்.
நமது இந்தியா, அனைத்து மத மக்களுக்குமான மதச்சார்பற்ற நாடு எனும் அடிப்படைத் தத்துவத்திற்கு வித்திட்டவர் அண்ணல் காந்தியடிகள்!
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) October 2, 2025
மக்களிடையே வெறுப்பின் விதைகள் தூவப்பட்டு, பிரித்தாளும் சக்திகள் தலைதூக்கும் போதெல்லாம் அவற்றை எதிர்கொள்ளும் வலிமையை நமக்கு என்றும் வழங்கும் ஆற்றல் அவர்.… pic.twitter.com/XdRrDDmiSZ





















