நடிகர் விவேக்கின் இடத்தை இனி எவராலும் நிரப்பமுடியாது - முதல்வர் பழனிசாமி புகழஞ்சலி
நடிகர் விவேக்கின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகர் விவேக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் பழனிசாமி, ”விவேக்கின் இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது” என புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
நடிகர் விவேக் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில், மாரடைப்பு காரணமாக நேற்று காலை சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு எக்மோ கருவி மூலமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.
இந்நிலையில், இன்று காலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக் உயிரிழந்தார் என்று மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அவருக்கு வயது 59. அவரின் உயிரிழப்பு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மறைவுக்கு திரைப்பட கலைஞர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் விவேக் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இரங்கல் அறிக்கையில், ‘சின்ன கலைவாணர் நடிகர் விவேக் மறைவு செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். அவர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுரலகில் சிறந்த நடிகராக தன் ஆளுமையை கோலோச்சியவர். எண்ணற்ற படங்களில் விவேக்கின் நடிப்பு சிரிக்க வைத்ததோடு மட்டுமின்றி, சிந்திக்கவும் வைத்துள்ளது.
பிளாஸ்டிக் தடை, கொரோனா விழிப்புணர்வு பணிகளில் அரசுக்கு உறுதுணையாக திகழ்ந்தவர். கலைச்சேவையாலும், சமூக சேவையாலும் பெருமைசேர்த்த விவேக்கின் மறைவு மிகப்பெரிய இழப்பாகும். அவரின் இடத்தை இனி எவராலும் நிரப்பமுடியாது’ என புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.