Mudhalvar Marundhagam: அட..முதல்வர் மருந்தகத்துல விலை இவ்ளோ கம்மியா.? இது உண்மையாவே சூப்பர் திட்டம்...
தமிழகம் முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்த நிலையில், அங்கு மருந்துகளின் விலை எவ்வளவு குறைவாக கிடைக்கும் என்று தெரியுமா.?

தமிழகம் முழுவதும் ஏற்கனவே கூட்டுறவு மருந்தகங்கள், அம்மா மருந்தகம், பிரதமரின் மக்கள் மருந்தகம் என மருந்துகளை குறைந்த விலையில் வழங்கும் மருந்தகங்கள் இருக்கும் நிலையில், இன்று(24.02.25) 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த மருந்தகத்தில் அப்படி என்ன சிறப்பு.? பார்க்கலாம்.
முதல்வர் மருந்தகங்கள் எவ்வாறு செய்லபடுகின்றன
தமிழகம் முழுவதும், 1000 முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த மருந்தகங்களில், 762 வகையான மருந்துகள் விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த மருந்தகங்களை, கூட்டுறவுத்துறையும், தமிழ்நாடு சுகாதாரத் துறையின் மருந்துகள் சேவைகள் கழகமும் இணைந்து செயல்படுத்துகின்றன.
கூட்டுறவு சங்கங்கள் மூலம் 500 மருந்தகங்களும், தொழில் முனைவோர் மூலம் 500 மருந்தகங்களும் திறக்கப்பட்டுள்ளன. சென்னையில் 33, மதுரையில் 52, கடலூரில் 49, கோவையில் 42, தஞ்சாவூரில் 40 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இந்த மருந்தகங்களை தொடங்குவதற்கு, தமிழ்நாடு அரசின் சார்பாக ரூ.3 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. அதில், முதலில் மருந்துகள் வாங்குவதற்கான முதலீடாக ரூ.1.5 லட்சமும், ஏசி உள்ளிட்ட மற்ற உட்கட்டமைப்புகளுக்கு ரூ.1.5 லட்சமும் மானியமாக வழங்கப்படுகிறது.
மருந்தகங்கள் தொடங்கப்பட்டதற்கு 2 நோக்கங்கள் - முதல்வர்
முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 1000 மருந்தகங்கள் என்பது முதற்கட்டம்தான் என்றும், இன்னும் நிறைய மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளதன் குறிக்கோள் கொஞ்சமும் சிதையாமல் அரசு அதிகாரிகள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்பட்டதற்கு இரண்டு நோக்கங்கள் இருப்பதாக கூறிய முதலமைச்சர், முதல் நோக்கம், ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைப்பது என்றும், இரண்டாவது, பி.ஃபார்ம் படித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்கள், சொந்தமாக தொழில் தொடங்க ஏதுவாக இத்திட்டம் வகுக்கப்பட்தாகவும் தெரிவித்தார்.
மருந்துகள் எந்த அளவிற்கு குறைவான விலையில் கிடைக்கும்.?
முன்னதாக, இந்த முதல்வர் மருந்தகத்தில் எந்த அளவிற்கு விலை குறைவாக கிடைக்கும் என்பது குறித்து, திமுக மருத்துவரணி செயலாளரும், எம்.எல்.ஏவுமான மருத்துவர்.எழிலன் பேட்டியளித்தார். அப்போது, மாதத்திற்கு சுமார் ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை மக்கள் வெளியில் வாங்கும் மருந்துகள், முதல்வர் மருந்தகத்தில் ரூ.1,000-த்திற்கு கிடைக்கும் என கூறினார். மேலும், 50-75% வரை மக்களுடைய மருத்துவச் செலவுகளை குறைப்பதற்கான திட்டம் தான் இது என தெரிவித்தார்.
உதாரணத்திற்கு, சர்க்கரை நோய்கான மெட்ஃபார்மின் மாத்திரை, 30 மாத்திரைகள் அடங்கிய ஒரு அட்டை, தனியாரிடம் வாங்கினால் ரூ.70 ஆகும் என்றும், பிரதமரின் மருந்தகத்தில் வாங்கினால் ரூ.30 ஆகும் என்றும், ஆனால், முதல்வர் மருந்தகத்தில் அந்த மாத்திரையின் விலை ரூ.11 மட்டுமே என தெரிவித்தார்.
மேலும், கிடங்குகளிலிருந்து 48 மணி நேரத்திற்குள் மருந்தகங்களுக்கு மருந்துகள் சென்றுவிடுவதால், மக்கள் மருந்துகளை தாமதமின்றி வாங்கலாம் எனவும் எழிலன் தெரிவித்தார்.
அம்மா மருந்தகங்கள் மூடப்படுமா.?
தமிழகத்தில் உள்ள அம்மா மருந்தகங்களின் நிலை குறித்த கேள்விக்கு பதிலளித்த எழிலன், அம்மா மருந்தகம் மூடப்படுவதற்கான வாய்ப்பே இல்லை என்றும், கூட்டுறவு மருந்தகம், அம்மா மருந்தகம், பிரதமர் மருந்தகம் ஆகியவற்றுடன் முதல்வர் மருந்தகம் என ஒரு ஆரோக்கியமான போட்டியாக இருக்கும் என தெரிவித்தார். இதில் ஒவ்வொரு மருந்தகமும் குறைந்த சலுகை விலையில் மருந்துகளை விற்பதால், இறுதியாக அதன் பயனாளிகள் மக்களாகவே இருப்பார்கள் என கூறினார்.
மேலும், அரசு மருத்துவமனைகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படும் மருந்துகள் நிறுத்தப்படாது என்றும், 762 வகையான மருந்துகள் முதல்வர் மருந்தகங்களில் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.





















