’தமிழகத்தில் +2 தேர்வு நடக்குமா..?’ - ஆலோசனைக்குப் பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முதல்வர் விரைவில் முடிவு எடுத்து அறிவிப்பார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வழக்கமாக மார்ச் மாதத்தில் நடத்தி முடிக்கப்படுவது வழக்கம். ஆனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வந்ததால் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மீண்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நிச்சயம் நடத்தியே தீர வேண்டும் என்று அரசு உள்ள நிலையில், மத்திய அரசு சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ததால் தமிழகத்திலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று சில தரப்பினர் வலியுறுத்தினர்.
இதையடுத்து, தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை நடத்துவது குறித்து இணையவழியில் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது, 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை நிச்சயம் நடத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். இதையடுத்து,இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறினார்.
இந்த நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று சட்டமன்றத்தில் உள்ள 13 கட்சி பிரதிநிதிகளுடனும் காணாளி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அ.தி.மு.க. சார்பில் பங்கேற்றார். அவர் தவிர காங்கிரஸ். பா.ஜ.க., பா.ம.க., ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு, வி.சி.க., ம.ம.க., கொ.ம.தே.க., தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி, புதிய பாரதம் கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துக்கட்சிகளும் தேர்வை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும், பா.ஜ.க. மட்டும் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த ஆலோசனை கூட்டத்தில் மாணவர்களின் தேர்வு மையங்களை அதிகரிக்க வேண்டும், 100 மாணவர்களுககு ஒரு தேர்வு மையம் அமைக்க வேண்டும், மாணவர்களுக்கு முறையான சமூக இடைவெளியுடன் கூடிய போக்குவரத்து வசதியை ஏற்படுத்த வேண்டும், மாணவர்களுக்கான தேர்வு நேரத்தை குறைக்க வேண்டும், விரிவான விடை அளித்தல் பகுதிக்கு பதிலாக எளிமையாக விடை அளிக்கும் விதமாக கேள்விகளை தயாரிக்க வேண்டும் என்றும் அனைத்துக்கட்சிகளும் கருத்து தெரிவித்துள்ளன.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கியமாக மாணவர்களின் பாதுகாப்பு குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. எந்தவொரு மாணவரும் பாதிக்கப்படாத வகையில் தேர்வை எவ்வாறு நடத்த வேண்டும் என்றும் ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு முன்னதாக, முன்னாள் முதல்வரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியுடன் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்வது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்திற்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் , 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து சட்டமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதிகள் அளித்த கருத்துக்கள் முதல்வரிடம் விரிவாக எடுத்துக்கூறப்படும். இந்த கருத்துக்களின் ஆலோசனையின் அடிப்படையில் முதல்வர் இறுதி முடிவு எடுத்து விரைவில் அறிவிப்பார் என்று கூறினார். முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனையும் விரிவாக எடுத்துரைக்கப்பட உள்ளது.