CM MK Stalin Speech: “முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து பேசிய பிரதமர்” : சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்
வாட் வரியை குறைக்காததுதான் பெட்ரோல் விலை அதிகரிக்க காரணம். மத்திய அரசின் வார்த்தைகளுக்கு செவி கொடுக்காமல் மாநில அரசுகள் மக்களுக்கு கூடுதல் சுமை அளிக்கிறது - பிரதமர் மோடி

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டசபையில் இன்று பத்திரப்பதிவ, வணிகவரி மற்றும் கைத்தறித்துறைகள் துறைகளின் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதன்படி, காலை 10 மணிக்கு பேரவையில் விவாதம் தொடங்கியது.
இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் பெட்ரோல், டீசல் விலை குறித்து பிரதமர் மோடியின் புகாருக்கு விளக்கம் அளித்தார். அதில், “பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவரத்தில் முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து பிரதமர் பேசி உள்ளார்” என தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து முதலமைச்சர் பேசியதாவது: ”பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைப்பதற்கு ஒன்றிய அரசு எடுத்த முயற்சிகளுக்கு சில மாநிலங்கள் ஒத்துழைக்கவில்லை என்றும், இந்தப் பொருட்களின் மேல் மாநில அரசுகள் விதிக்கக்கூடிய வரிகளை இந்த அரசுகள் குறைக்காத காரணத்தால்தான் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாட்டில் குறைக்க முடியவில்லை என்றும் பிரதமர் அவர்கள் நேற்றைக்குக் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார். இதனைப்பற்றி நான் ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்று சொன்னால், முழுப்பூசணிக்காயை சோற்றிலே மறைப்பது போல், அவர் இந்தக் கருத்தை எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, கச்சா எண்ணெய்யின் விலை பெருமளவு சரிந்தபோது, அதற்கேற்றாற்போல பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்காமல், அந்த எண்ணெய் விலை வீழ்ச்சியால் கிடைத்த உபரி வருவாய் முழுமையும் தனதாக்கிக் கொண்டது ஒன்றிய அரசு. பெட்ரோல் மற்றும் டீசல் மேல் விதிக்கப்படக்கூடிய மத்திய கலால் வரியானது, மாநில அரசுகளோடு பகிர்ந்து அளிக்கக்கூடியது என்ற காரணத்தால், அதனைக் குறைத்து மாநில அரசுகளுக்குப் பகிர்ந்து அளிக்கப்படும் வருவாயில் கை வைத்தது ஒன்றிய அரசு.
பெட்ரோல், டீசல் விலை விவகாரம்: முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் மோடி! - முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்https://t.co/wupaoCQKa2 | #MKStalin #TNAssembly2022 #NarendraModi #PetrolDieselPrice pic.twitter.com/6cfDr5HDY3
— ABP Nadu (@abpnadu) April 28, 2022
பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்படக்கூடிய ஒன்றிய தலவரி மற்றும் தலமேல்வரியும், மாநில அரசுகளோடு பகிர்ந்தளிக்கப்படத் தேவையில்லை என்பதால், இந்த வரிகளை மிகக் கடுமையாக உயர்த்தி, மக்கள் மீது சுமையைத் திணித்து, அதனால் கிடைக்கும் இலட்சக்கணக்கான கோடி வருவாயை முழுவதும் தனதாக்கிக் கொண்டது ஒன்றிய அரசு. சில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது என்ற ஒரே காரணத்திற்காக பாசாங்கு காட்டுவதுபோல இந்தத் தேர்தலுக்கு முன்பாக அதிரடியாக பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்படும் வரிகளைக் குறைத்து வேடம் போட்டது ஒன்றிய அரசு.
மாநில அரசு தேர்தல்கள் முடிந்த பின்பு, அடுத்த வாரம் முதல் மடமடவென விலையை முன்பு இருந்ததை விட உயர்த்தி, மக்கள் மீது கூடுதல் சுமையை சுமத்தும் ஒன்றிய அரசு. ஆனால், தேர்தல் முடிந்து வெற்றி பெற்ற பின்பு, தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டவாறு மக்கள் நலன் கருதி, நிதிநிலைமையையும் பொருட்படுத்தாமல், ஒன்றிய அரசு குறைப்பதற்கு முன்பாகவே, பெட்ரோல் மீது விதிக்கப்படும் மாநில வரியைக் குறைத்தது தமிழக அரசு. இவையனைத்தும் தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். யார் பெட்ரோல் விலையைக் குறைப்பதில் உண்மையிலேயே முனைப்பு காட்டுகிறார்கள்; யார் பெட்ரோல் விலையைக் குறைப்பது போல நடித்து பழியை மற்றவர்கள் மீது போடுகிறார்கள் என்பதை மக்களுடைய முடிவிற்கே நான் விட்டு விடுகிறேன்” என முதலமைச்சர் பேசி இருக்கிறார்.
முன்னதாக, நேற்று நடைபெற்ற கொரோனா தொடர்பான மாநில அரசு கூட்டத்தில் வாட் வரி குறித்து பேசிய பிரதமர் மோடி, வாட் வரியை குறைக்காததுதான் பெட்ரோல் விலை அதிகரிக்க காரணம். மத்திய அரசின் வார்த்தைகளுக்கு செவி கொடுக்காமல் மாநில அரசுகள் மக்களுக்கு கூடுதல் சுமை அளிக்கிறது என பேசினார்.
பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு குறைத்த நிலையில் தமிழ்நாடு, மே.வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் குறைக்கவில்லை வரியை குறைக்காததால் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

