MK Stalin Meeting: ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு தேவை இருக்கு.. இது உங்களோட பொறுப்புதான்! ஆட்சியர்களுக்கு உத்தரவிட்ட முதல்வர்!
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு தேவை இருக்கும், அதற்கேற்ப நிறுவனங்களை ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதுரையில் இன்று கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மதுரை, ராமநாதபுரம், தேனி , சிவகங்கை, திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன்ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேசிய முதலமைச்சர் , “ அரசின் மக்கள் நலத் திட்டங்களுக்கு ஆட்சியர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பு ஆட்சியர்களிடம் உள்ளது. கிராமப்புற மக்களின் வருமானத்தை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு தேவை இருக்கும், அதற்கேற்ப நிறுவனங்களை ஏற்படுத்த வேண்டும்.” என தெரிவித்தார்.
இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், தென் மாவட்டங்களை பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த அரசு உணர்ந்து அதற்கென பல திட்டங்களை வகுத்து வருகிறது. குறிப்பாக, கிராமப்புற மக்களின் வருமானத்தைப் பெருக்கவும், வாழ்வாதாரத்தை உயர்த்தவும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்
மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் ஆகியவற்றில் நல்ல முன்னேற்றம் காட்டப்பட வேண்டும். ஏழை. எளிய மக்கள் மற்றும் விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தோடு நேரடித் தொடர்புடைய திட்டங்களாக இது அமைந்திருக்கிறது. வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படக்கூடிய சராசரி நாட்களை உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் திட்டங்களை கள ஆய்வு செய்வதன் மூலம் துரிதப்படுத்துவதோடு அதன் தரத்தினையும் உறுதி செய்யலாம் எனவும் இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.