CM MK Stalin: குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை..
குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று, முதல்முறையாக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். அந்த தேர்தலில் திமுக பல வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்தது. அதில் ஒன்று குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது.
இதன்பின்னர் திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்ட போதிலும் இதுவரை குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்படவில்லை. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகளும் கேள்விமேல் கேள்வி எழுப்பி வந்தது. அதேசமயம் அப்போதைய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாடு அரசின் நிதி நிலைமை சரியானதும் வழங்கப்படும் என தொடர்ந்து தெரிவித்து வந்தார்.
இதனிடையே கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் இந்த திட்டம் தொடங்கப்படும் என அவர் தெரிவித்தார், மேலும் நடப்பு நிதியாண்டில் இந்த திட்டத்துக்காக ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே இந்த உரிமைத் தொகை வழங்குவது தொடர்பாக இன்று பிற்பகல் 3 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த கூட்டத்தில் தகுதியுள்ள குடும்பத் தலைவிகள் யார் என்பதை கண்டறிந்து, ரூ.1000 உரிமைத் தொகை வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் முடிவெடிக்க உள்ளார். மாவட்ட ஆட்சியர்கள் மட்டுமல்லாது தாசில்தார்கள், ஆர்.டி.ஓக்கள், மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள், கூடுதல் ஆட்சியர்கள், உள்ளிட்ட அனைவரும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையை கவனிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு உரிமைத் தொகைப் பெற தகுதியுடையவர்கள் யார்?, விண்ணப்பிப்பது எப்படி? உள்ளிட்டவை குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.