Velammal: இணையத்தில் வைரலான ‘புன்னகை பாட்டி’ வேலம்மாள் மறைவு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..
தனது புன்னகையால் இணையவாசிகளிடமும், தமிழ்நாடு மக்களிடமும் பிரபலமான வேலம்மாள் பாட்டி வயது மூப்பால் காலமானார்.
தனது புன்னகையால் இணையவாசிகளிடமும், தமிழ்நாடு மக்களிடமும் பிரபலமான வேலம்மாள் பாட்டி வயது மூப்பால் காலமானார்.
கொரோனா நிவாரணத்தொகை
2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்முறையாக முதலமைச்சர் ஆனார். அந்நேரம் தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அவதிப்படும் மக்களுக்காக தமிழ்நாடு அரசு ரூ.4 ஆயிரம் நிவாரணத்தொகையும் அறிவித்தது. இந்த தொகை இரண்டு கட்டமாக வழங்கப்பட்டது. முதல் தவணையில் ரூ.2 ஆயிரம் மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்த தொகையை பெற்றதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் பிரபலமானார் வேலம்மாள் பாட்டி. அவர் பணம் மற்றும் பொருட்களை வாங்கிக்கொண்டு தன் வயதுக்கே உரித்தான பொக்கைவாய் சிரிப்புடன் அவர் கொடுத்த போஸ் தமிழ்நாடு அரசுக்கே தங்கள் திட்டத்தின் சிறப்பை சொல்ல உதவியது. இவரின் போட்டோவை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஏழையின் சிரிப்பு.. நமது அரசின் சிறப்பு” என தெரிவித்திருந்தார்.
ஒற்றை சிரிப்பால் மாறிய வாழ்க்கை
இந்த பாட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த கீழக்கருங்குடி பகுதியைச் சேர்ந்தவர். ட்ரெண்டிங் ஆனவுடன் தனக்கு வீடு இல்லை என்றும், அரசு வீடு கட்டி தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். பின்னர் ஒருநாள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் வேலம்மாள் பாட்டியை நேரில் சந்தித்தார். அப்போது வீடு கேட்டு கோரிக்கை விடுக்கவே மறுநாளே வேலம்மாள் பாட்டிக்கு அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு சொந்தமான குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டது.
தள்ளாத வயதில் சிரமப்பட்ட அந்த பாட்டியின் ஒற்றை சிரிப்பு அவரின் வாழ்க்கையையே மாற்றிப் போட்டது. அவரின் காலம் மகிழ்வாக கழிந்த நிலையில், வேலம்மாள் பாட்டி தனது 92வது வயதில் வயது மூப்பு உடல்நலக்குறைவால் காலமானார். முன்னதாக சில நாட்கள் மருத்துபமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் அவர் மரணமடைந்துள்ளார். அவரது இறுதிச்சடங்குகள் இன்று நடக்கும் நிலையில், இணையத்தில் பலரும் வேலம்மாள் பாட்டி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் இரங்கல்
அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வேலம்மாள் பாட்டி மறைந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன். கொரோனா பேரிடர் கால நிவாரணமாகக் கழக அரசு வழங்கிய நிவாரணத் தொகையைப் பெற்ற போது, மக்களின் எண்ணங்களைப் பிரதிபலித்த அவரது புன்னகை வழியாக அவர் என்றும் நம்மிடையே நிலைத்திருப்பார். அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.