Erode East Bypoll: பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவது எப்போது?.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன பதில்..!
ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை மறுநாள் (பிப்ரவரி 27) இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என அரசியல் கட்சிகள் கடும் போட்டிக்கு மத்தியில் களமிறங்கியுள்ளது.
பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் எப்போது தொடங்கும் என்பது அடுத்த மாதம் வெளியாகும் தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டின் போது தெரிய வரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை மறுநாள் (பிப்ரவரி 27) இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என அரசியல் கட்சிகள் கடும் போட்டிக்கு மத்தியில் களமிறங்கியுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது. இதில் திமுக கூட்டணி சார்பில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனும், அதிமுக சார்பில் அந்த தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசுவும் போட்டியிடுகின்றனர். அதேபோல் நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா, தேமுதிக கட்சி சார்பாக ஆனந்தும் களம் காண்கின்றனர்.
இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. கடைசிநாளான இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்களிடையே பேசிய அவர், திமுக ஒன்றும் செய்யவில்லை என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் சொல்லிவிட்டு போகிறார். நீங்கள் எதை எதை செய்யவில்லையோ, அத்தனையும் செய்து முடித்திருக்கிற ஆட்சிதான் இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய திமுக ஆட்சி என தெரிவித்தார்.
மேலும் ஒரே ஒரு திட்டம் பாக்கி இருக்கிறது. அது பெண்களுக்கான உரிமைத் தொகை ரூ.1000 வழங்குவது. மார்ச் மாதம் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் வரப்போகிறது. அந்த பட்ஜெட்டின் போது உரிமைத் தொகை எப்போது வழங்கப்போகிறோம் என்பதை அறிவிப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட கூறியுள்ளார்.
எந்த திட்டங்களாக இருந்தாலும், அதை தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டு இருக்கக்கூடிய ஆட்சியாக திமுக ஆட்சி செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஆட்சிக்கு வந்தவுடனே ஈரோடு மாநகராட்சிக்கு ரூபாய் 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இன்னும் பல திட்டங்கள் நடக்கவுள்ளது. எனவே பொதுமக்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு மிகப் பெரிய வெற்றியைத் தேடி தர வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.