Christmas 2022: : மழைக்கு நடுவே கோலாகல கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்... தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
சென்னை பெசண்ட் நகரில் உள்ள வேளாங்கண்ணி மாதா தேவாலயம், நூற்றாண்டு பழமையான சென்னையின் புனித தோமையார் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
உலகம் முழுவதும் இன்று (டிச.25) கிறிஸ்துமஸ் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
கரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டுகளில் கிறிஸ்துமஸ் விழாக்கள் எளிமையாகக் கொண்டாடப்பட்ட நிலையில், சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழாவை இந்த ஆண்டு மக்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
மழைக்கு நடுவே சிறப்பு வழிபாடு
அதன்படி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் விழா இன்று களைக்கட்டியுள்ளது.
நேற்று மாலையான ’கிறிஸ்துமஸ் ஈவ்’ தொடங்கி, நள்ளிரவு சிறப்புப் பிரார்த்தனைகள் வரை தேவாலயங்களில் தொடர்ந்து வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை கொட்டத் தொடங்கியது. எனினும் மழையையும் பொருட்படுத்தாது மக்கள் திரளாக தேவாலயங்களுக்குச் சென்று சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
விழாக்கோலம் பூண்ட பழமையான தேவாலயங்கள்
சென்னை பெசண்ட் நகரில் உள்ள வேளாங்கண்ணி மாதா தேவாலயம், நூற்றாண்டு பழமையான சென்னையின் புனித தோமையார் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வரும் நிலையில், மக்கள் மழையை பொருட்படுத்தாது குடும்பங்களுடன் கலந்து கொண்டு வழிபட்டு வருகின்றனர்.
அதே போல், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயம், தூத்துக்குடி, பனிமய மாதா தேவாலயம், புதுச்சேரி முழுவதும் உள்ள தேவாலயங்களில் கூட்டுப் பிரார்த்தனைகளில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு வழிபட்டு வருகின்றனர்.
அதே போல் தலைநகர் டெல்லி கதீட்ரல் தேவாலயம், கேரள மாநிலம், திருவனந்தபுரம், கொச்சியில் உள்ள பிரபல தேவாலயங்களில், கோவா தலைநகர் பனாஜி, கர்நாடகாவின் பெங்களூரு மாநகர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்துமஸ் விழா களைகட்டியுள்ளது.
உலகம் முழுவதும் களைகட்டும் கொண்டாட்டம்
இயேசு கிறிஸ்து பிறந்த இடமான பெத்தலகேம் கிறிஸ்துமஸ் விழாக் கோலம் பூண்டது. கத்தோலிக கிறிஸ்தவர்களின் தலைமையிடமான வாடிகனில், ரோமன் கத்தோலிக சபையின் தலைவரான போப் ஃபிரான்சிஸ் தலைமையில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூருவதோடு தேசங்கள், கலாச்சாரங்கள் மற்றும் இனங்களின் எல்லைகளைக் கடந்து, பன்முகத்தன்மையை உள்ளடக்கிய ஒரு பண்டிகையாக கிறிஸ்துமஸ் நாள் மாறியுள்ளது.
கிறிஸ்துமஸ் தினம் இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளைக் குறிப்பது மட்டுமல்லாமல், அவர் இந்த பூமியில் எவ்வாறு நடந்து கொண்டார், அவரது மாண்பு, கருணை ஆகியவற்றை நினைவில் கொண்டு போற்ற வேண்டிய நாளாக பார்க்கப்படுகிறது.
மக்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இந்த நாளில் ஒன்று கூடி வழிபட்டும், இயேசுவின் தியாகங்களுக்கு நன்றி செலுத்தியும், ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி பரிசுகள் வழங்கியும் கொண்டாடுகின்றனர்.
மேலும் கிறிஸ்துமஸ் மரங்கள், நட்சத்திரங்களால் தங்கள் வீடுகளை அலங்கரித்து, கிறிஸ்துமஸ் தாத்தாவான சாண்டாகிளாஸ் போல் வேடமிட்டும், கேக் உள்ளிட்ட உணவுகளைப் பரிமாரியும் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உலகம் முழுவதுமுள்ள கிறிஸ்துவர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.