HBD CM Stalin: முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்தநாள் - பிரதமர் மோடி, கமல், விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
HBD CM Stalin: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
HBD CM Stalin: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள்:
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை பற்றி முந்தைய தலைமுறையினர் முதல் இன்றைய தலைமுறையினர் வரை சொல்லி தெரிய வேண்டியதில்லை. பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பத்தில் பிறந்த அவர் இளமை காலம் தொட்டே அரசியலிலும், மக்களுக்கான போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் முதல்முறையாக பதவியேற்றார். இதனிடையே அவர் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
தலைவர்கள் நினைவிடத்தில் மரியாதை:
பிறந்தநாளை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கும் சென்று மரியாதை செலுத்தினார். இதைதொடர்ந்து திமுக தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெற உள்ளார். இதனிடையே, பல்வேறு தரப்பினரும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து:
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழட்டும்”என குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுனா கார்கே வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
Birthday greetings to Thiru @mkstalin Ji, CM of Tamil Nadu. May he lead a long and healthy life.
— Narendra Modi (@narendramodi) March 1, 2024
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்புத் தோழர் மு.க. ஸ்டாலின். நமது அரசியலமைப்பில் பொதிந்துள்ள ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற விழுமியங்களைப் பாதுகாப்பதில் உங்கள் உறுதியான தீர்மானம் மிகவும் ஊக்கமளிக்கிறது. நீங்கள் முடிவில்லாத மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் தொடர்ச்சியான வெற்றிகளை விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு என் இனிய பிறந் நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
— TVK Vijay (@tvkvijayhq) March 1, 2024
விஜய்,
தலைவர்,
தமிழக வெற்றிக் கழகம்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “சமூகநீதி, மகளிர் மேம்பாடு, இளைஞர் நலம், தொழில் வளர்ச்சி என தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி வரும் எனது அன்பிற்கினிய நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் நீடூழி வாழ அவரது பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை “தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன் மக்கள் பணி தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதனிடையே, நடிகர் ரஜினிகாந்த், தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலினை தொடர்பு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.