CM Stalin Review : கள ஆய்வில் முதலமைச்சர்: 5 மாவட்டங்களுக்குச் செல்லும் முதல்வர் ஸ்டாலின்.. விவரம்
மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி ஆகிய 5 மாவட்டங்களுக்கு மார்ச் 5, 6ஆம் தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்ல உள்ளார்.
மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி ஆகிய 5 மாவட்டங்களுக்கு மார்ச் 5, 6ஆம் தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்ல உள்ளார். கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக 3ஆவது கட்டமாக இந்த ஆய்வு நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் "கள ஆய்வில் முதலமைச்சர்" என்ற திட்டத்தை தொடங்கி வைத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று, வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.
இந்த நிலையில் முதல்வர், முக்கிய அமைச்சர்கள், அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் ஆகியோருடன் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளையும், விரிவாக ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
முன்னதாக பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய இரண்டு நாட்களில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, குடிநீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வருவாய்த் துறை வழங்கக்கூடிய சேவைகள், ஊரக மேம்பாடு, நகர்ப்புற வளர்ச்சி, சாலை மேம்பாடு, வாழ்வாதாரத்தை உயர்த்துதல், இளைஞர் திறன் மேம்பாடு, பொதுக் கட்டமைப்பு வசதிகள், கல்வி, மருத்துவம், குழந்தைகள் ஊட்டச்சத்து போன்ற முக்கிய துறைசார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் பயன்கள் பொதுமக்களுக்கு முழுமையாகச் சென்றடைவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சேலத்தில் 2ஆவது ஆய்வுக் கூட்டம்
அதைத் தொடர்ந்து சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட ஆய்வு கூட்டம் பிப்ரவரி 15 மற்றும் 16ஆம் தேதி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். இக்கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு முதல்வர் வந்தார்.
பின்னர், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த முதல்வர் ஸ்டாலின், விவசாயிகள் மற்றும் தாட்கோ திட்ட பயனாளிகளுடன் கலந்துரையாடினார். பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 4வது தளத்தில் நடக்கும் சட்டம், ஒழுங்கு தொடர்பான ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் ஆகிய 4 மாவட்ட ஆட்சியர்கள், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர், சரக டிஐஜி, 4 மாவட்ட எஸ்பிக்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி ஆகிய 5 மாவட்டங்களுக்கு மார்ச் 5, 6ஆம் தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்ல உள்ளார். கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக 3ஆவது கட்டமாக இந்த ஆய்வு நடைபெற உள்ளது.