(Source: ECI/ABP News/ABP Majha)
CM Stalin Podcast: மாநிலங்களை ஒழித்துக்கட்ட நினைக்கிறது பாஜக - முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு
மாநில சுயாட்சியை உறுதி செய்ய வேண்டும் என்றால் I.N.D.I.A கூட்டணியை வெற்றிப்பெற செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பாட்காஸ்ட் சீரிஸில் பேசியுள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில், மத்தியில் ஆளும் பாஜக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியிருப்பது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்தான். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்தியாவிற்காக பேச பாட்காஸ்ட் தொடங்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை தனது மூன்றாவது பாட்காஸ்ட் சிரீஸ் வெளியிட்டுள்ளார்.
#Speaking4India Episode – 3
— M.K.Stalin (@mkstalin) October 31, 2023
➡️ மாநில சுயாட்சிக்கான இன்றைய தேவை குறித்து தமிழ்நாட்டின் குரல்!
➡️ எபிசோட் 2-இன் ரீச்சும், ஒன்றிய அரசின் ரியாக்ஷனும்!
➡️ மாநில முதலமைச்சராக ஆதரவு பேச்சும் – பிரதமரானவுடன் எதிர்ப்பும்!
➡️ மாநில நிர்வாகத்தை முடக்கிட, ஆளுநர் மாளிகை?
➡️ மினி… pic.twitter.com/iuSm9slnIz
அதில், “ இரண்டாவது பாட்காஸ்ட் சீரிஸில் சி.ஏ.ஜி அறிக்கையில் பா.ஜ.க செய்த 7 மெகா ஊழல் குறித்து பேசப்பட்டது, அதனை மத்திய அரசே ஒப்புக்கொள்ளும் வகையில் நாளிதழில் செய்தி வந்தது. அதில் செப்டம்பர் 12-ஆம் தேதியே சிஏஜி அறிக்கை வெளியிட்ட அதிகாரிகள் அனைவரும் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர். இந்த மூன்றாவது தொடரில் நாம் பேசப்போவது மாநில உரிமைகள், திமுக தனக்கென தனி கொள்கையோடு செயல்பட்டு வரும் கட்சி மட்டும் கிடையாது, நாடாளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சியாக இருந்து ஜனநாயகத்தை காப்பாற்ற போராடும் கட்சியும் கூட. அப்படிப்பட்ட திமுகவின் முக்கிய கொள்கைகளில் ஒன்றுதான் மாநில சுயாட்சி. இந்தியா என்பதே கூட்டாட்சிதான், பல்வேறு நம்பிக்கைகளை கொண்ட மக்கள் இங்கு இருக்கிறார்கள் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இந்தியா பல்வேறு அழகிய மலர்கள் நிரம்பிய பூந்தோட்டம்.
பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது மாநில உரிமைகள் பற்றி அதிகம் பேசுவார். ஆனால் பிரதமர் ஆன பின் அரசியல் அமைப்பு சட்டத்தின் முதல் வரியே பிடிக்காமல் போனது, (India that is Bharat shall be a Union of States) மாநில உரிமைகள் பற்றி பேசிய அவர், மாநில உரிமைகளை பறிக்க நினைக்கிறார். அவரது தலைமையிலான ஆட்சி மாநிலங்களை ஒழிக்க நினைக்கிறது இல்லை என்றால் அனைத்தையும் முனிசிபலாக மாற்ற நினைக்கிறது.
உதாரணமாக பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலத்தில் கட்சியை உடைத்து எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி செய்து வருகிறது. முக்கியமாக கூட்டாட்சியை ஆதரிப்பவன் நான் என பேசிய மோடி, மாநில திட்டங்களுக்கு ஒப்புதல் பெற மத்திய அரசின் வாசலில் நிற்க வேண்டிய சூழல் உள்ளது. மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதி ஆதாரங்கள் வழங்கப்படும் என பிரதமர் பேசியுள்ளார். ஆனால் ஜி.எஸ்.டி இழப்பீடு வழங்க கால நீடிப்பு கிடையாது என குறிப்பிட்டுள்ளார். மாநிலங்களுக்கான பங்கையும் முறையாக வழங்கப்படுவதில்லை. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் ஜிஎஸ்டியால் மாநிலங்களின் நிதிநிலை ஐ.சி.யு வில் உள்ளது. கடந்த 19 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு சுமார் ரூ.85,000 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இனி ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டிற்கு சுமார் ரூ. 10,000 கோடி வரை இழப்பீடு ஏற்படும்.
மகளிருக்கான 100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் பணம் நேரத்திற்கு தராமல் இழுத்தடிக்கப்படுகிறது. இந்த நிலை தான் இந்தியா முழுவதும். மத்திய அமைச்சர் ஒருவர் பிரதமர் மோடியின் புகைப்படங்கள் இடம்பெறவில்லை என்றால் நிதி வழங்கப்படாது என கூறியுள்ளார். இது தான் பாஜகவின் உண்மை முகம்.
ஆளுநர் மாளிகைகளை வைத்து மாநில நிர்வாகத்தை முடக்குவது பாஜக ஒரு ஆக்ஷன் ப்ளானாக வைத்துள்ளது பாஜக. அதனால் தான் 19 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடிக்கப்படுகிறது. உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக அமைப்பை சின்னாபின்னமாக்கி சிதைத்து வருகிறது. மாநில உரிமைகள் நசுக்கப்படுகிறது. மாநில கல்வி கொள்கையில் தலையிட்டு குழந்தைகளின் எதிர்காலத்தில் விளையாடுவதுதான் மிகவும் மோசமான செயல். அனைத்து மாநிலங்களில் இருக்கும் தனித்துவமான கலாச்சார கொள்கைகளை அழிப்பதுதான் தேசிய கல்விக்கொள்கை. இன்னும் பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம்.
இவற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள ஒரே வழி மாநில சுயாட்சிதான். இதனால் தான் 1974 ஆண்டு கலைஞர், நாட்டிலேயே முதல் முறையாக மாநில சுயாட்சியை வலுப்படுத்தும் வகையில் ராஜமன்னார் குழுவை அமைத்தார். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதை வலியுறுத்திய கலைஞருக்கு தெற்கு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் அதற்கு ஆதரவு குரல்கள் எழுப்பப்பட்டது. ஆனால் பாஜக ஆர்.எஸ்.எஸ் உருவாக்க நினைக்கும் அதிகார ஆட்சியை நிறுவ எண்ணுகிறது. மாநில சுயாட்சி மேலும் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி வெற்றிபெற வேண்டும். இந்தியாவை இந்தியக் கூட்டணி கையில் கொடுங்கள்” என பேசியுள்ளார்.