கட்டிட, அமைப்பு சார தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசு அறிவித்த முதல்வர்... என்ன பரிசுனு தெரியுமா...?
கட்டிட தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டு தீபாவளி பரிசாக ரூ.5 ஆயிரமும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.1,500-ம் வழங்கப்படும்- முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி: புதுச்சேரியில் கட்டிடத் தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் தீபாவளி பரிசாகத் தரப்படும் என்று அறிவித்த முதலமைச்சர் ரங்கசாமி, தீபாவளியையொட்டி புதுச்சேரி மக்களுக்கு ரூ.1000 மதிப்புள்ள 10 பொருட்கள் ரூ.500 மானிய விலையில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
முதல்வர் ரங்கசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில்:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கட்டிட தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டு தீபாவளி பரிசாக ரூ.5 ஆயிரமும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.1,500-ம் வழங்கப்படும். அரசின் வடி சாராய ஆலை லாபத்தில் இயங்கி வருகிறது. 2017 முதல் 2021 வரை 4 ஆண்டுகளுக்கு லாப ஈவுத் தொகையாக ரூ.1.45 கோடி வழங்கியுள்ளது. அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தொடர்ந்து சிறப்பாக பணிபுரிய வேண்டும்.
ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி, சர்க்கரை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி, சர்க்கரை வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. 30 கடைகள் மட்டுமே திறக்கப்படவில்லை. அந்த பகுதிகளில் அங்கன்வாடிகள், பள்ளிகளில் இலவச அரிசியை சிரமமின்றி பெறலாம்.
மானிய விலையில் 10 பொருட்கள்
கான்பெட் நிறுவனம் மூலம் தீபாவளியை முன்னிட்டு புதுச்சேரி மக்களுக்கு மானிய விலையில் 10 பொருட்கள் வழங்கப்படவுள்ளன. ரூ.1000-ம் மதிப்புள்ள பொருட்களை ரேஷன் கார்டுகளை காட்டி தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விற்பனை மையத்தில் ரூ.500 மானிய விலையில் பெற்றுக்கொள்ளலாம். விரைவில் அந்த 10 பொருட்கள் பற்றிய விவரம் தெரிவிக்கப்படும் என தெரிவித்தார்.
புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்
மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்காலிக போனஸ் கணக்கிடும் உச்சவரம்பை ரூ.7,000 ஆக நிர்ணயித்து நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய அரசின் சம்பள முறையைப் பின்பற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச ஊழியர்களுக்கும், இந்த உத்தரவுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, புதுச்சேரி அரசில் பணிபுரியும் 'குரூப் பி' மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.7,000 கிடைக்கும். மத்திய அரசின் உத்தரவைப் பின்பற்றி, புதுச்சேரி அரசின் நிதித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி அரசின் நிதித்துறை சார்பு செயலர் சிவக்குமார் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். தீபாவளி போனஸ் தொடர்பான உத்தரவு நகலை அனைத்து துறை செயலர்கள், துறை தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
விவசாய கடன்கள் தள்ளுபடி
புதுச்சேரியில் விவசாயிகள் பெற்ற கடன் ரூ.13 கோடி உள்ளது. இதில் முதல் கட்டமாக ரூ.12 கோடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். தீபாவளிக்கு முன்பாகவே அந்த கடன் தள்ளுபடியை செய்து தீபாவளி பரிசாக கொடுக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் கூறியுள்ளார். ஆகவே தீபாவளிக்கு முன்பாகவே அந்த கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு கிடைக்கும்.
தீப ஒளித்திருநாள்
தீபாவளி (Deepavali, Diwali) திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற பண்டிகையாகும். இது இந்து, சீக்கியம், சைனம் மற்றும் பௌத்தம் மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். இப்பண்டிகை இந்தியா இலங்கை சிங்கப்பூர் உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. அதாவது, வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை ஐப்பசி மாதத்தில் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பிரதமை, பௌ-பீச்சு ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது.