CM MK Stalin: ஒத்திவைக்கப்பட்ட நேற்றைய பயணம்: இன்று காலையே டெல்லி புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையே டெல்லி புறப்பட்டு சென்றார்.
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை சந்திப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையே விமானத்தில் டெல்லி புறப்பட்டார்.
டெல்லி பயணம்:
விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் நேற்றைய பயணத்தை ஒத்திவைத்துவிட்டு இன்று புறப்பட்டு சென்றார். குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை இன்று காலை 11.30 மணிக்கு முதலமைச்சர் சந்திக்கிறார். கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க அழைப்பு விடுப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். கிண்டியில் ரூ. 230 கோடியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு மருத்துவமனை ஜூன் 3 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒருநாள் பயணமாக டெல்லி சென்று அங்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்திக்க திட்டமிட்டிருந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்காக நேற்று இரவு டெல்லி செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு இருவரும் சென்னை விமான நிலையத்திற்கு நேற்று இரவு 8.30 மணிக்கு வந்தனர்.
குடியரசுத் தலைவருடன் சந்திப்பு:
ஆனால், அவர்கள் செல்வதாக திட்டமிட்டிருந்த டெல்லி விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, 9.30 மணி வரை விமான நிலையத்தில் காத்திருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விமான தொழில்நுட்ப கோளாறு சரி செய்வதற்கு மேலும் கால அவகாசம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டெல்லி பயணத்தை ரத்து செய்துவிட்டு வீடு திரும்பினார்.
இந்த நிலையில், இன்று காலையே சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்க நேரில் அழைப்பு விடுக்க உள்ளார்.
கருணாநிதி நூற்றாண்டு விழா:
இந்த புதிய பன்னோக்கு மருத்துவமனை சுமார் 51 ஆயிரத்து 429 சதுர கி.மீ. பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. தரைத்தளம் மற்றும் 6 மாடிகளுடன் இந்த புதிய மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் மக்கள் பலன் பெறும் வகையில் இதயம், சிறுநீரகம், மூளை நரம்பியல், ரத்தநாளங்கள், குடல் – இரைப்பை, புற்றுநோய் ஆகிய பிரிவுகளுக்கு அறுவை சிகிச்சை துறைகள் செயல்பட உள்ளது.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான மறைந்த கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ந் தேதி இந்த கட்டிடம் திறக்கப்பட உள்ளது. கருணாநிதியின் பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு முதலமைச்சர் இந்த பன்னோக்கு மருத்துவமனை திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சோனியாவுடன் சந்திப்பா?
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மட்டுமின்றி காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி மற்றும் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களையும் மு.க.ஸ்டாலின் சந்திப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பு நிறைவு பெற்ற பிறகு இன்று இரவே அவர் சென்னை திரும்ப உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சி தலைவர்களுடனான சந்திப்பின்போது அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: Ponniyin Selvan 2 LIVE: ரிலீசானது பொன்னியின் செல்வன் 2 ... கொண்டாடும் ரசிகர்கள்.. அப்டேட்டுகள் உடனுக்குடன்..!
மேலும் படிக்க: Ponniyin Selvan 2: “மீண்டும் சோழர்களின் பயணம்” - வெளியானது பொன்னியின் செல்வன் 2.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!