CM MK Stalin Speech: ”வடக்கு வளர தெற்கு உதவுகிறது..” சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
இன்று தெற்கு வளர்கிறது, வடக்கிற்கும் சேர்த்து தெற்கு வாரி வழங்குகிறது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
தெற்கு வளர்கிறது, வடக்கு வளரவும் தெற்கு உதவுகிறது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை வழங்கினார். அப்போது பேசிய அவர், “ தமிழும், தமிழ்நாடு நம்மை இயக்கி கொண்டு இருப்பதால்தான் உற்சாகமாக இயங்குகொண்டு இருக்கிறோம். இந்தியாவில் தலைசிறந்த மாநிலம் தமிழ்நாடு என்ற பெருமையை நம் பெரியார், அண்ணா, கலைஞர் என்ற உன்னத தலைவர்கள் போட்டு தந்த வழிதடம்தான் காரணம். திராவிட மாடல் வளர்ச்சியில் நாம் பயணித்துகொண்டு இருப்பதால்தான் யாராலும் நம் வளர்ச்சியை தடுக்க முடியவில்லை, தடுக்கவும் முடியாது. ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவனை மறைக்க முடியாது.
ஒரு காலத்தில் ‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ என்று நாமே முழங்கினோம். இன்று தெற்கு வளர்கிறது, வடக்கிற்கும் சேர்த்து தெற்கு வாரி வழங்குகிறது. இத்தகைய தகுதியும், பெருமையும் எதனால் என்றால் திராவிட இயக்கதால்தான்.
ஆட்சி என்பது வெறும் அதிகாரம் அல்ல, கொள்கையை செயல்படும் களம் என்பதை நிரூபித்து காட்டியவர்கள்தான் பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழ் அறிஞர் கலைஞரும்." என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், “என் கையில் முதலமைச்சர் என்ற பொறுப்பு வந்து 33 மாதங்கள் ஆகிறது. இவை "முன்னேற்ற மாதங்கள்!" "சாதனை மாதங்கள்!" இந்தியாவின் பொருளாதாரத்துக்கு 9 விழுக்காடு பங்கைத் தருகிறது தமிழ்நாட்டின் பொருளாதார வளம்! இது, திராவிட மாடல் ஆட்சியின் முதல் சாதனை. மேசையைத் தட்டும் ஒலி)
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அளவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது; இது, இரண்டாவது சாதனை.
ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சி 7.24 விழுக்காடாக இருக்கும்போது தமிழ்நாட்டின் வளர்ச்சியானது 8.19 விழுக்காடாக உயர்ந்துள்ளது! இது, மூன்றாவது சாதனை. (மேசையைத் தட்டும் ஒலி)
இந்திய அளவில் பணவீக்கமானது 6.65 விழுக்காடாக இருக்கும்போது, தமிழ்நாட்டில் அது 5.97 விழுக்காடாக குறைந்து உள்ளது! இது, நான்காவது சாதனை.
தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக 14-ஆவது இடத்தில் இருந்த தமிழ்நாட்டை 3-ஆவது இடத்துக்கு உயர்த்தி உள்ளோம்! இது, ஏழாவது சாதனை.
கல்வியில் இரண்டாவது இடத்துக்குத் தமிழ்நாட்டை உயர்த்தியது இந்த ஆட்சியின் எட்டாவது சாதனை.
புத்தாக்கத் தொழில்கள் வரிசையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பது ஒன்பதாவது சாதனை.
ஏற்றுமதி தயார் நிலைக் குறியீட்டில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது! இது, ஐந்தாவது சாதனை.
மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது! இது, ஆறாவது சாதனை
இளைஞர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், விளிம்புநிலை மக்கள், ஒடுக்கப்பட்டோர் ஆகியோர் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து, தங்களது வாழ்க்கைத்தரம் உயர்ந்து வருவதாகச் சொல்லத் தொடங்கி இருப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியின் பத்தாவது சாதனை.
இந்தப் பத்து மட்டுமல்ல, இந்தியாவின் தென் மூலையில் ஒரு ஆட்சி நடக்கிறது அதன் திட்டங்களைத் தெரிந்து வந்து நம் மாநிலத்தில் செயல்படுத்துங்கள் என்று பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்களும், அதிகாரிகளும் இங்கு வந்து பார்த்துச் செல்வதுதான் திராவிட மாடல் ஆட்சியின் வரலாற்றுச் சாதனை. இப்படி, இன்று முழுவதும் என்னால் பட்டியலிட்டுக் கொண்டே இருக்க முடியும். ஆனால், நேரம் போதாது.
இந்தச் சாதனைகளுக்கு எல்லாம் மகுடம் சூட்டுவதுபோல் ஒரு சாதனை இருக்கிறது. அது தான் மிக மிக முக்கியமானது. நமது ஆட்சியில் தமிழ்நாடு அனைத்து வகையிலும் வளர்ந்து வருவதைப் பார்த்து நம் இன எதிரிகளுக்கு பொறாமையும் கோபமும் வருகிறது அல்லவா? அதுதான் திராவிட மாடல் ஆட்சியின் மாபெரும் சாதனை (மேசையைத் தட்டும் ஒலி) என்பதைப் பெருமையுடன் இந்த அவையில் பதிவு செய்ய விரும்புகிறேன்.
ஆதிக்கக் குவியலை அகற்றுவதும், அடிமைப் பள்ளத்தை நிரப்புவதும் இவர்களது கோபத்துக்குக் காரணம் அந்தக் கோபத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் காட்டுகிறார்கள். அரசியல் சட்டப் பதவியில் இருக்கும் ஆளுநரும் அதற்கு விதிவிலக்கல்ல. அதற்காக நாம் அமைதியாக இருக்க முடியாது. நாட்காட்டியில் நகரும் ஒவ்வொரு நாளும், நாட்டு மக்களுக்கு நன்மை செய்யும் நாளாக அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.” என்று பேசினார்.