Mettur Dam: மேட்டூர் அணை திறப்பு: தஞ்சாவூரில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..
தஞ்சையில் பாசன ஆறுகள் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
தஞ்சையில் பாசன ஆறுகள் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
தஞ்சை டெல்டா மாவட்டங்களின் குறுவை நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணை வரும் 12ஆம் தேதி திறக்க உள்ளதையடுத்து கல்லணையிலிருந்து திறக்கப்படும் நீர் கடைமடை வரை தங்குதடையின்றி செல்ல 90 கோடி ரூபாய் செலவில் பாசன ஆறுகள் தூர்வாரப்பட்டு வருகின்றன. தூர்வாரும் பணிகளை இன்று ஆய்வு செய்ய தஞ்சைக்கு வந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சையை அடுத்துள்ள ஆலக்குடியில் உள்ள முதலைமுத்துவாரியை ஆய்வு செய்தார்.
முதலமைச்சருடன் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர் கே.பன்னீர்செல்வம், கே.என் நேரு உள்ளிட்டோரும் நீர்வளத்துறை பொறியாளர்கள், வேளாண்துறை அலுவலர்களும் இருந்தனர். அதனையடுத்து பூதலூரை அடுத்துள்ள விண்ணமங்கலத்தில் தூர்வாரும் பணியை ஆய்வு செய்துவிட்டு, திருச்சியில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்ய உள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் பெய்து வந்த மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியது. தற்போது காவிரி கரையோர பகுதிகளில் மழை குறைந்து வருகிறது, இதனால் அங்கிருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 715 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 1,178 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 1,040 கன அடியாக குறைந்துள்ளது.
அணையின் நீர் மட்டம் 103.54 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 69.50 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 89 வது ஆண்டாக கடந்த ஆண்டு மே 24 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 16.5 லட்சம் ஏக்கர் பாசனம் பெறும்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது.