Chennai: சென்னை: பிரபல மாலில் நடைபெற்ற மது விருந்து... பங்கேற்ற இளைஞர் பலி - அதிர்ச்சி சம்பவம்
சென்னையில் நடைபெற்ற டிஜே பார்டியில் பங்கேற்ற இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையிலுள்ள தனியார் மாலில் நடைபெற்ற மது விருந்தில் பங்கேற்ற இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலுள்ள தனியார் மாலில் நேற்று இரவு மது விருந்துடன் கூடிய டிஜே பார்டி நடைபெற்றுள்ளது. இதில் பல இளைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அதன்படி "கிரேட் இந்தியன் கேதரிங்" என்ற நிகழ்ச்சியை பிரேசில் நாட்டைச் சேர்ந்த மண்டோரா கோரா என்ற உலகப்புகழ் பெற்ற நபரால் சென்னையில் டிஜே நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக விளம்பரப்படுத்தப்பட்டது. சென்னை திருமங்கலம் வி.ஆர்.மாலில் 4-வது தளத்தில் DJ ஆடல் பாடல் நிகழ்ச்சி நடப்பதாக ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்கப்பட்டது. ரூ. 1500க்கு டிக்கெட் கொடுத்து நேற்று இரவு நிகழ்ச்சி நடந்தது.
இதற்கு முறையாக அனுமதி வாங்கவில்லை என்றும், மதுவிருந்து நடப்பதாகவும் அண்ணாநகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே திருமங்கலம் போலீசார், அண்ணாநகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர். அப்போது இதில் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து சுமார் 900 ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு மது விருந்து அளிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அனைவரையும் நான்காவது மாடியில் இருந்து அப்புறப்படுத்தினர். 844 விலை உயர்ந்து மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தமிழ்நாடு மதுவிலக்கு சட்டப்பிரிவின் கீழ் அண்ணாநகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நிகழ்ச்சி நடத்திய விக்னேஷ் சின்னதுரை, மார்க், பாரத் மற்றும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த மது விருந்து நிகழ்ச்சியில் மடிப்பாக்கத்தைச் சேர்ந்த பிரவீன் (23) என்பவர் தனது நண்பர்களுடன் கலந்து கொண்டார். பாடலுக்கு நடனமாடி கொண்டிருந்த போது பிரவீன் திடீரென மயங்கி விழுந்தார். உடனே நண்பர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் அளவுக்கு அதிகமாக மதுபோதையில் இருந்ததாக தெரிவித்துள்ளனர். அவர் மேல்சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் அவர் சிகிச்சை பலன்றி அங்கு உயிரிழந்துள்ளார். இது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மதுவிருந்தில் போதை பொருட்கள் பயன்படுத்தப்பட்டதா? என்ற கோணத்திலும் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்