Chennai: குழந்தையை சுமந்தேன்.. ஏமாற்றி விட்டனர்.. சென்னையில் வாடகை தாய் மோசடி!? புகாரளித்த இளம்பெண்!!
சென்னை அமைந்தகரையில் வாடகை தாயாக இருந்தால் 5 லட்சம் தருவதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிவிட்டதாக இளம்பெண் ஒருவர் தனியார் மருத்துவமனை மீது புகார் அளித்துள்ளார்.
சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திருவள்ளூர் மாவட்டம் நெமிலிச்சேரியை சேர்ந்த 24 வயதான இளம் பெண் ஒருவர் தனியார் மருத்துவமனை மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், வாடகை தாயாக இருந்தால் 5 லட்சம் தருவதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரில்,
திருவள்ளூர் மாவட் டம் நெமிலிச்சேரி பகுதியில் வசித்து வருகிறேன். எனது தோழியான ரம்யா என்பவர் மூலம் அமைந்தகரை காவல் நிலைய எல்லையில் உள்ள குழந்தை பிறப்பிற்கான தனியார் சிகிச்சை மருத்துவமனையில் பணியாற்றி வரும் முரளி என்பவர் வாடகைத் தாயாக இருந்து குழந்தை பெற்றுத்தருமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு நான் சம்மதம் தெரிவித்து மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 2020 ஆம் ஆண்டு வாடகை தாய் குறித்து விசாரித்தேன். அப்பொழுது ஒரு ஆண் குழந்தை என்றால் 4 லட்சம் என்றும், இரட்டை குழந்தை என்றால் 5 லட்சம் கொடுப்பதாக பேசி என்னை சம்மதிக்க வைத்தனர். மேலும், ஒப்பந்தம் செய்து என்னிடம் கையெழுத்தும் பெற்று கொண்டார்கள்.
பின்னர் சிகிச்சை அளிக்கப்பட்டு கருவுற்ற 7வது மாதம் அதாவது கடந்த 3ம் தேதி அதே மருத்துவமனையில் தனக்கு இரட்டை குழந்தை பிறந்து குழந்தைகளை மருத்துவமனை ஊழியர்கள் எடுத்துச் சென்றனர். அதன் பின்னர் தான் சிகிச்சை முடிந்து வீட்டிற்குச் சென்று மீண்டும் ஒரு வாரம் கழித்து ஸ்கேன் செய்வதற்காக மருத்துவமனை சென்றேன்.
அப்பொழுது, அந்த மருத்துவமனை ஊழியர்கள் என்னிடம் குழந்தை இறந்து விட்டது என்றும், அதனால் ஒப்பந்தப்படி ரூ.5 லட்சம் பணம் கொடுக்க முடியாது என்றும் கூறி, ரூ.10 ஆயிரத்தை மட்டும் கொடுத்து அனுப்பினர்.இதுதொடர்பாக நான் மருத்துவமனையை தொடர்பு கொண்டபோது அவர்கள் சரியான பதிலையும் தரவில்லை. எனவே என்னை ஏமாற்றிய தனியார் மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுத்து, எனக்கு சேரவேண்டிய பணத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, இந்த புகாரின் அடிப்படையில் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்த அமைந்தகரை காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Watch video: வழி தெரியாத வட இந்திய லாரி.. உரசியதில் உடைந்த பெரியார் சிலை.. விழுப்புரத்தில் பரபரப்பு
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்