விக்னேஷ் சந்தேக மரணம் தொடர்பாக காவல்துறையினர் மீது கொலை வழக்கு.. பேரவையில் முதல்வர் விளக்கம்
இந்த வழக்கானது கொலை வழக்காக மாற்றப்பட்டு, காவலர்கள் மீது கொலை வழக்கு பதியப்பட்டு விசாரணையை தொடந்து நடத்திட சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது - முதலமைச்சர்
![விக்னேஷ் சந்தேக மரணம் தொடர்பாக காவல்துறையினர் மீது கொலை வழக்கு.. பேரவையில் முதல்வர் விளக்கம் Chennai Vignesh murder case against the police in connection with the death of the suspect - the Chief Minister's explanation in the Assembly விக்னேஷ் சந்தேக மரணம் தொடர்பாக காவல்துறையினர் மீது கொலை வழக்கு.. பேரவையில் முதல்வர் விளக்கம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/06/78404f9eb69b93d89d93157f21f0c1e8_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னையில் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி பட்டினப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ், விக்னேஷ் ஆகிய இருவரும் வந்த ஆட்டோவை கெல்லீஸ் அருகே, காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். ஆட்டோவில் வந்த இருவரிடமும், காவல்துறையினர் விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறியதால், போலீஸார் அவர்களை சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையின்போது அவர்களிடம் கஞ்சா, மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார், சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சிறையில் இருந்த விக்னேஷ் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி மரணம் அடைந்தார். விக்னேஷின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில் விக்னேஷ் மரணம் தொடர்பாக வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில், விக்னேஷின் உடலில் 13 இடங்களில் காயங்கள் இருப்பதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்த நிலையில் அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசியதன் விவரம்:- வாகன சோதனையின் போது கஞ்சா, மதுபாட்டில்கள் வைத்திருந்ததையொட்டி விக்னேஷ் கைது செய்யப்பட்டு, காவல்துறையினரின் விசாரணையின்போது உடல்நலம் குன்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்துள்ளார் என்பது குறித்து ஏற்கெனவே இந்த அவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து, எதிர்க்கட்சித் தலைவர் மட்டுமல்ல இங்குள்ள கட்சித் தலைவர்களும் உறுப்பினர்களும் பேசி உள்ளார்கள்.
அப்போது நான் பதிலளித்து பேசிய நேரத்தில் விக்னேஷ் இறப்பு குறித்து சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து, மாஜிஸ்டேட் விசாரணை நடந்து வருகிறது. விக்னேஷின் உடல் 20-04-2022 அன்று மாஜிஸ்டேட் முன்னிலையில் மருத்துவ குழுவினரால் உடற்கூராய்வு செய்யப்பட்டுள்ளது என்றும், இது வீடியோ மூலம் முழுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், பிரேத பரிசோதனை முடிவுற்ற பின்னர், அன்றைய தினமே உறவினர்கள் இடத்திலே முறைப்படி விக்னேஷின் உடல் ஒப்படைக்கப்பட்டதை எல்லாம் நான் அன்றைக்கு தெரிவித்து இருந்தேன்.
மேலும் இந்த வழக்கானது, சந்தேக மரண வழக்காக பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ள நிலையில் தலைமை செயலக காலணி காவல்நிலைய உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், காவலர் பொன்ராஜ், ஊர்க்காவல் படை காவலர் தீபக் தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளார்கள். மேலும் காவல்துறை இயக்குநர் அவர்கள் மேல் விசாரணைக்காக இந்த வழக்கினை 24-04-2022 அன்று சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். ஆகவே விக்னேஷ் மரணம் தொடர்பாக சட்டப்படியான அனைத்து நடவடிக்கைகளையும் முறையாக அரசு எடுத்து வருகிறது என நான் தெரிவித்துள்ளேன்.
தற்போது கிடைத்துள்ள விக்னேஷின் உடற்கூராய்வு முடிவுகளின் படி எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டது போல் அவரது உடலில் 13 இடங்களில் காயங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் இந்த வழக்கானது கொலை வழக்காக மாற்றப்பட்டு, காவலர்கள் மீது கொலை வழக்கு பதியப்பட்டு விசாரணையை தொடந்து நடத்திட சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்பதை இந்த அவைக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)