Chennai to Puducherry: இயற்கையும் கடல் காற்றும் ! ECRல் பறக்கும் சாலை; 100 கி.மீ. வேகத்தில் பறக்கலாம்...!
சென்னை - புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை ரூ.1,650 கோடியில் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது.

சென்னை - புதுச்சேரி இடையிலான கிழக்கு கடற்கரை சாலையில் வாகன நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் போதிய சாலை விரிவாக்க நடவடிக்கைகள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எடுக்கப்படாமல் இருந்தது. அதே சமயம் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு கட்டணம் மட்டும் வசூலிக்கப்பட்டு வந்தது. கிழக்கு கடற்கரை சாலையில் விபத்துகளும் சாமீபகாலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக வார இறுதி நாட்களில் மக்கள் அதிக அளவில் புதுச்சேரி செல்வதால் அசம்பாவிதங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் கிழக்கு கடற்கரை சாலையை விரிவாக்கம் செய்வதற்கான வேலைகளில் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் (NHAI) ஈடுபட்டுள்ளது. குறிப்பாக 105 கிலோமீட்டர் தூரம் கொண்ட மாமல்லபுரம் முதல் புதுச்சேரி - விழுப்புரம் மார்க்கத்தில் உள்ள ஆழியூர் கிராமம் வரையிலான பகுதியில் மூன்று கட்டங்களாக பணிகள் நடைபெற்று வருகிறது.
அவை 23 கிலோமீட்டர் தூரம் கொண்ட மாமல்லபுரம் - முகையூர், 36 கிலோமீட்டர் தூரம் கொண்ட முகையூர் - மரக்காணம், 46 கிலோமீட்டர் தூரம் கொண்ட மரக்காணம் - ஆழியூர் ஆகும். இந்த ஒட்டுமொத்த சாலையும் நான்கு வழிச் சாலையாக மாற்றப்படுகிறது.
இதன் பணிகள் முடிவடையும் பட்சத்தில் மாமல்லபுரம் - புதுச்சேரி (ஆழியூர்) பயண நேரம் என்பது 90 நிமிடங்களாக குறைந்துவிடும். இதில் முதல் பகுதி டிசம்பர் 2024ல் திறக்கப்பட்டது. இரண்டாவது பகுதி டிசம்பர் 2025ல் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது. இந்நிலையில் கடைசி பகுதியில் பணிகள் தொடங்கப்படாமல் இருந்தது. தற்போது டெண்டர் கோரப்பட்டு ஜூன் மாதம் இறுதியில் பணிகள் தொடங்கப்படும். மூன்று கட்டங்களில் அதிக செலவீனம் கொண்ட சாலைப் பகுதியாக மரக்காணம் - புதுச்சேரி (ஆழியாறு) இருக்கிறது. அதாவது, 1,605 கோடி ரூபாய் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் விவசாயிகளிடம் இருந்து நிலம் கையகப்படுத்துவதற்கு அதிகம் செலவிட வேண்டியிருந்தது. மேலும் சாலையின் செயல் திட்டத்திலும் மாற்றங்கள் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சாலை அமைக்க வேண்டும். ஏனெனில் அருகில் பறவைகள் சரணாலயம் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி ஆகியவை இருக்கின்றன. இதையொட்டி தான் மூன்றாம் கட்ட சாலைப் பகுதியான செல்கிறது. மரக்காணம் பகுதியில் பக்கிங்காம் கால்வாய் இருப்பதால் அங்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி தற்போது நிறைவு நிலையை எட்டியுள்ளது.
சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அழிக்கப்படும் மரங்களுக்கு ஈடாக புதிய மரக்கன்றுகள் நட்டு வளர்க்கவும் முடிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை - புதுச்சேரி இடையிலான கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் நிறைவடைந்தால் பொதுமக்கள் குறைந்த நேரத்தில் பயணம் மேற்கொள்ளலாம், இயற்கையும் கடல் காற்றும் மனதை கவர்ந்து இழுக்கும்.
புதுச்சேரி - கடலூர் இடையே புதிதாக 6 வழிச்சாலை
புதுச்சேரி- கடலூர் இடையே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக புதிதாக 6 வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக மரக்காணம் முதல் கூனிமேடு வரை 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்த சாலை மூலம் கடலூருக்கு புதுச்சேரிக்குள் செல்லாமல் விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை வழியாக விரைவாக செல்ல முடியும். இதனால் புதுச்சேரி நகருக்குள் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், விபத்துகளும் குறையும்.
அதிவேக பறக்கும் சாலையாக அமைக்கும் பணிகள்
இந்த சாலை அதிவேக பறக்கும் சாலையாக அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்தால் 100 கி.மீ. வேகத்தில் வாகனங்கள் செல்லலாம். இந்த பறக்கும் வழி சாலை செல்லும் பகுதியில் கிராமப்பகுதிகளில் இருந்து செல்லக்கூடிய வாகனங்களோ அல்லது விபத்துக்களை ஏற்படுத்த கூடிய கால்நடைகள் சாலையின் குறுக்கே செல்ல முடியாத வகையில் சாலையின் கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
கூனிமேடு முதல் அரியூர் வரை 31 கி.மீ. தூரத்திற்கு 6 வழி சாலை அமைக்கும் பணி முடிந்தால் புதுச்சேரிக்குள் வாகன நெரிசல் வெகுவாக குறைக்கப்படும். தற்போது கடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டுமென்றால் ECR வழியாக வரும் வாகனங்கள் புதுச்சேரி நகரத்திற்குள் சென்றுதான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த 6 வழி சாலை முடிந்தால் அரியூர் வழியாக செல்லும் வாகனங்கள் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் இணைக்கப்படும். இதன் மூலம் புதுச்சேரி நகரத்திற்குள் செல்லாமல் கடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு விரைவாக செல்லலாம். இதனால் பயண நேரம் மீதம் ஆகும்.





















