Chennai Rains: "219 படகுகள், 931 நிவாரண மையங்கள்" மழையை எதிர்கொள்ள தயார் - துணை முதலமைச்சர் உதயநிதி
கனமழை எச்சரிக்கை காரணமாக படகுகள், நிவாரண மையங்கள் தயார் நிலையில் இருப்பதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னைக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள சூழலில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், கட்டுப்பாட்டு அறையில் துணை முதலமைச்சர் உதயநிதி நேரில் ஆய்வு செய்தார். பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
படகுகள்,நிவாரண மையங்கள்:
அப்போது, அவர் கூறியதாவது, “ சென்னையில் 89 படகுகள் மற்றும் பிற மாவட்டங்களில் 130 படகுகள் தயார் நிலையில் உள்ளது. சென்னையில் 300 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளது. சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் 631 நிவாரண மையங்கள் என மொத்தம் 931 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளது.
சென்னையில் 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் மற்ற மாவட்டங்களில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வெள்ளத்தை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். மருத்துவத்துறை மற்றும் மாநகராட்சி இணைந்து தமிழ்நாடு முழுவதும் 1000 மருத்துவ முகாம்களை திறந்து வைத்துள்ளனர். சென்னையில் 13 ஆயிரம் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 65 ஆயிரம் தன்னார்வலர்கள் தயாராக உள்ளனர். தேவைப்பட்டால் அவர்கள் சென்னைக்கு அழைத்து வரப்படுவார்கள்.
வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தல்:
சென்னையில் மொத்தம் 8 இடங்களில் மரம் முறிந்து விழுந்துள்ளது. அவற்றை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் இரண்டு சுரங்கப்பாதைகள் தற்காலிமாக மூடி வைக்கப்பட்டுள்ளது. ஐ.டி. உள்ளிட்ட நிறுவனங்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியிருந்தார். இன்று அதை மீண்டும் அறிவுறுத்துகிறோம். நாளை மற்றும் நாளை மறுநாள் மழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளி விடுமுறை குறித்து முதலமைச்சர் இன்று மாலை முடிவெடுத்து தெரிவித்திருப்பார். அனைத்து நிவாரண பணிகளும் தயாராக உள்ளது. அந்தளவு மழையின் பாதிப்பு இல்லை. இன்று இரவு மழை இன்னும் அதிகமானால் அவர்களை நிவாரண மையங்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு பால், குடிநீர், தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்படும். கடந்த முறை போல இந்த முறை செல்போன் சிக்னல் இதுவரை இல்லை.”
இவ்வாறு அவர் கூறினார்.
ரெட் அலர்ட்:
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வரும் சூழலில், சென்னையிலும் மழை பரவலாக பெய்து வந்தது. இந்த நிலையில், சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் சூழலில் நேற்று முதல் மழை விட்டுவிட்டு பல இடங்களில் பெய்து வருகிறது. சென்னையில் தற்போது வரை தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு, அண்ணாநகர், வடபழனி, வளசரவாக்கம், கிண்டி, கோயம்பேடு, ராயப்பேட்டை, தி.நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.