சென்னையில் கனமழை தொடங்கியது... விடியல் மோசமாக இருக்கலாம்!
சென்னையில் தற்போது பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையிலும்,காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னையில் தற்போது பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையை சுற்றியுள்ள பகுதிகளான மேற்கு மாம்பலம், கிண்டி, தரமணி, ஆதம்பாக்கம், கொளத்தூர் ஆவடி பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
அதேபோல், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, திருவல்லிக்கேணி, மெரினா பகுதிகளில் அதிகனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக சென்னையில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை (18.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
— DON Updates (@DonUpdates_in) November 17, 2021
காஞ்சிபுரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு#RainHoliday | #NEM2021
சென்னையை தொடர்ந்து, புதுக்கோட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதிகனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை மக்கள் 2 நாட்களுக்கு தேவையான குடிநீர், பால், உணவுப் பொருட்களை தயாராக வைத்துக்கொள்ள சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. மேலும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்ய அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. நீர்நிலைகள், கால்வாய்கள், மழைநீர் தேங்கும் இடத்தில் மக்கள் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மழை தொடர்பான புகார் மற்றும் நிவாரண உதவிகளுக்கு 1913 என்ற எண்ணை அழைக்கலாம் என்றும், 044 - 25619204, 044 - 25619206, 044 - 25619207, 044-25619208 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
முன்னதாக, தென்கிழக்கு, மத்திய கிழக்கு வங்கக்கடல், அதை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு திசையில் நகர்ந்து நவ.18 ஆம் தேதி (நாளை) தெற்கு ஆந்திரா, வட தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும் என்று முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
இந்நிலையில்,வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையிலும்,காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சேலம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
மேலும், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது நவ.18 ஆம் தேதி தெற்கு ஆந்திரா, வட தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும் என்பதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நாளை கனமழை முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் இப்பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்