பணிச்சுமையால் மற்றொரு உயிரிழப்பு.. தனக்கு தானே ஷாக் கொடுத்த ஐடி ஊழியர்.. சென்னையில் பரபரப்பு!
பணிச்சுமை காரணமாக இளம்பெண் அன்னா செபாஸ்டியன் உயிரிழந்த நிலையில், சென்னையில் கடுமையான வேலைப்பளுவால் மன அழுத்தம் ஏற்பட்டு ஐடி ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னையை சேர்ந்த ஐடி ஊழியர், பணிச்சுமையால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 26 வயதான பட்டய கணக்காளர் (Chartered Accountant) அன்னா செபாஸ்டியன் அதீத வேலை அழுத்தம் காரணமாக உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வருகிறது.
சென்னையில் பரபரப்பு சம்பவம்:
இந்த நிலையில், பணிச்சுமை காரணமாக மற்றொரு உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. சென்னையில் கடுமையான வேலைப்பளுவால் மன அழுத்தம் ஏற்பட்டு ஐடி ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை செய்து கொண்ட நபரின் பெயர் கார்த்திகேயன்.
தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வந்தார். கடந்த 15 ஆண்டுகளாக சென்னையில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றிய இவர், சமீபத்தில் புதிய பணியில் சேர்ந்தார். மன உளைச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்தார்.
நடந்தது என்ன? வேலை அழுத்தம் காரணமாக கார்த்திகேயன் மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. ஆனால், குடும்பத்தினரும் போலீசாரும் இதை உறுதிப்படுத்தவில்லை. இதுகுறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், "தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம். அவர் சமீபத்தில் ஒரு புதிய நிறுவனத்தில் இணைந்திருக்கிறார். தற்கொலை கடிதத்தில், தனது குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே செய்தியை விட்டு சென்றுள்ளார்.
சம்பவத்தன்று கார்த்திகேயன் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். இவரது மனைவி கே. ஜெயராணி திங்கள்கிழமை சென்னையில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருநல்லூர் கோயிலுக்குச் சென்றார். குழந்தைகளை தன் தாயின் வீட்டில் விட்டுவிட்டு சென்றுள்ளார்.
வியாழக்கிழமை இரவு திரும்பி வந்துள்ளார். வீட்டின் கதவை தட்டியபோது, அவரது கணவர் வீட்டை திறக்கவில்லை. தன்னிடம் இருக்கும் மற்றொரு சாவியை பயன்படுத்தி வீட்டின் உள்ளே சென்றுள்ளார். அங்கு, பேச்சு மூச்சின்றி கிடந்துள்ள கார்த்திகேயன்" என தெரிவித்துள்ளனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)