ADMK Case: அதிமுகவில் மீண்டும் வெடிக்குமா உட்கட்சி பூசல்... முக்கிய வழக்கில் இன்று தீர்ப்பு...
அதிமுக உட்கட்சி விவகாரங்கள் குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாவதால், மீண்டும் உட்கட்சி பூசல் வெடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.?

அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களை விசாரிக்க, தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இன்று தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம். இதனால், அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூசல் வெடிக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேர்தல் ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடை
அதிமுகவின் தலைமையை கைப்பற்றிய எடப்பாடி பழனிசாமி தரப்பு, ஒ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரை நீக்கியதோடு, கட்சியின் சின்னம், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த முடியாமலும் செய்தது. இதையடுத்து, இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது. அது குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க இருந்த நிலையில், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்த இபிஎஸ் தரப்பு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இவ்விவகாரங்கள் தொடர்பான உரிமையியல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், மனுக்களை விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு தடை விதித்தது.
தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு
இந்த நிலையில், ஓ. பன்னீர்செல்வத்தின் மகனும் முன்னாள் எம்.பி-யுமான ஓ.பி. ரவீந்திரநாத் மற்றும் புகழேந்தி தரப்பில், தேர்தல் ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுக்கள், நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன், ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணையில் உள்ளது.
நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்
அதில், தேர்தல் ஆணையம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், உட்கட்சி விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகளின் உத்தரவிற்கு தேர்தல் ஆணையம் கட்டுப்படும் என்றும், தங்களுக்கு வந்த மனுக்களை விசாரிக்க தங்களுக்கு உரிமை உள்ளதா, இல்லையா என்பது குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்தது.
எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம்
இந்த வழக்கு தொடர்பாக வாதாடிய அதிமுக தரப்பு வழக்கறிஞர், புதிய தலைமை தேர்வு செய்யப்பட்டது, கட்சி விதிகளில் திருத்தம் செய்தது உள்ளிட்ட உட்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட உரிமையியல் நீதிமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும், தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் வாதாடினார். மேலும், தேர்தல் ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரியுள்ளவர்கள், அதிமுக உறுப்பினர்களே இல்லை என்றும், எடப்பாடி பழனிசாமிக்கே முழு ஆதரவும் உள்ளதாக அதிமுக வழக்கறிஞர் தெரிவித்தார். அதோடு, கட்சி தனக்கு சொந்தம் என யாரும் உரிமை கோராத நிலையில், உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க உரிமை இல்லை என்பதால் தடையை உறுதி செய்ய வேண்டும் என வாதாடினார்.
ஓ. பன்னீர்செல்வம் தரப்பு வாதம்
இதைத் தொடர்ந்து, ரவீந்திரநாத், புகழேந்தி உள்ளிட்டோர் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள், அதிமுக உறுப்பினர்களின் மனநிலை மாறிவிட்டதாகவும், பெரும்பாலானோர் ஓ. பன்னீர்செல்வத்திற்கே தற்போது ஆதரவாக இருப்பதாகவும் கூறினர். அதனால், இவ்விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.
இன்று(12.02.25) தீர்ப்பு வழங்குவதாக அறிவித்த நீதிபதிகள்
இரு தரப்பு வாதங்களையும் தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தின் வாதத்தை பதிவு செய்த பின்னரே விசாரணை நடத்த தடை விதிக்கப்பட்டதாகவும், நீதிமன்ற உத்தரவை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம் எனவும் தெரிவித்தனர். மேலும், தீர்ப்பு வழங்கும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என கூறிய நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை 2025 பிப்ரவரி 12ம் தேதி அறிவிப்பதாக தெரிவித்திருந்தனர்.
அதன்படி, இன்று தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், ஏற்கனவே சமீபத்தில் அதிமுகவில் செங்கோட்டையனால் சர்ச்சை வெடித்துள்ள நிலையில், வழக்கின் தீர்ப்பு வெளியானால், புதிய சிக்கல் ஏற்படுமோ என்ற அச்சம் அதிமுக தொண்டர்களிடையே எழுந்துள்ளது.

