சிக்கலில் சீமான்! விலக்கு கிடையாது; நேரில் ஆஜராகுங்க! - உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்ற சீமானின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு விக்கிரவாண்டியில் நடைபெற்ற இடைத்தேர்தலில்போது கஞ்சனூர் அருகே நேமூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “நாங்கள் தான் ராஜீவ்காந்தியை கொன்றோம். ஒரு நாள் வரலாறு திரும்ப எழுதப்படும். அப்போது இந்திய ராணுவத்தை நாங்கள் அமைதி படை என்ற பெயரில் அனுப்பி தமிழின மக்களை அழித்தொழித்த தமிழின துரோகி ராஜீவ் காந்தியை தமிழ் மண்ணிலேயே கொன்று புதைத்தோம் என வரலாறு எழுதப்படும்” என சர்ச்சையாக பேசினார்.
சீமானின் இந்த பேச்சுக்கு கடுமையான கண்டனங்கள் குவிந்தன. மேலும், ராஜீவ்காந்தி படுகொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சீமான் மீது காங்கிரஸ் தரப்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்ற சீமானின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. மேலும் பிடிவாரண்டை திரும்பப்பெறக்கோரி சீமான் விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளது.
(இது ஒரு பிரேக்கிங் செய்தி.. அப்டேட் செய்து கொண்டிருக்கிறோம். லேட்டஸ்ட் தகவல்களுக்கு தயவுசெய்து refresh செய்யுங்கள்)




















