Singara Chennai 2.0 : "சாலை ஆக்கிரமிப்பை சகிக்கவும் முடியாது.. சமரசமும் செய்யவும் முடியாது” - உயர்நீதிமன்றம் காட்டம்
ஆக்கிரமிப்பை அகற்றாமல் எப்படி சிங்கார சென்னை 2.0 என்ற இலக்கை எட்டப் போகிறீர்கள் என சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஆக்கிரமிப்பை அகற்றாமல் எப்படி சிங்கார சென்னை 2.0 என்ற இலக்கை எட்டப் போகிறீர்கள் என சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சிங்கார சென்னை 2.0
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்ததும் நடைபெற்ற சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடரில் இடம் பெற்ற ஆளுநர் உரையில் சிங்காரச் சென்னை திட்டம் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் இந்த பணிகளுக்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில் சிங்காரச் சென்னை 2.0 திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கவும், பணிகளை கண்காணிக்கவும், தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, அரசு கூடுதல் தலைமைச் செயலாளரின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பசுமை, தூய்மை, கலாச்சாரம், நீர்வளம், இயற்கை எழில், சுகாதாரம், கல்வி ஆகிய பல்வேறு பிரிவுகளின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சர்வதேச தரத்துக்கு இணையாக வாழ்வாதாரத்தை மேம்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது பொதுமக்களிடையே பாராட்டையும் பெற்றுள்ளது.
தீவிர கவனம் செலுத்தும் சென்னை மாநகராட்சி
இதனிடையே சமீபத்தில் சென்னை மாநகராட்சியில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வெளியிடப்பட்டது. இக்கூட்டத்தில் பேசிய மேயர் பிரியா, “சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் ரூ.55.61 கோடி செலவில் சாலை, வடிகால், விளக்குகள், குளம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்திருந்தார்.
இதனிடையே சென்னை கலங்கரை விளக்கத்தில் இருந்து பட்டினப்பாக்கம் வரை செல்லும் லூப் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள மீன் கடைகளாலும், அங்கு வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்துவதாலும் தினமும் காலை 8 மணி 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை சுட்டிக்காட்டி சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்து தெரிவித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சிங்கார சென்னை இலக்கை எப்படி எட்டப்போகிறீர்கள் என சென்னை மாநகராட்சிக்கு கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் சாலை ஆக்கிரமிப்பை சகிக்கவும் முடியாது, சமரசம் செய்யவும் முடியாது எனவும் தெரிவித்துள்ளனர். அதேசமயம் “மீன்களை கழுவுவதற்கா சாலைகள்? நடைபாதையை ஆக்கிரமித்து உணவகங்களை நடத்த அனுமதித்தது எப்படி?” எனவும் கேள்வியெழுப்பியுள்ளனர்.
சாலைகள் ஆக்கிரமிப்புக்கு தான் அனுமதிக்கப்படுக்கிறது. போக்குவரத்துக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மாநகராட்சி சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் லூப் சாலையில் மேற்கு பகுதியில் உள்ள உணவகங்களின் உரிமங்கள் ஆய்வு செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர். மேலும் லூப் சாலை மீன் வியாபாரிகளுக்காக கட்டப்படும் மீன் சந்தை பணிகள் 6 மாதங்களில் நிறைவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.