Rowdy Encounter: அடுத்தடுத்த என்கவுண்டர்.. சுட்டுக்கொலை செய்யப்பட்ட ரவுடிகள்.. வேட்டையாடும் போலீஸ்?
சென்னை அடுத்து பிரபல ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
செங்குன்றம் பார்த்திபன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி முத்துசரவணன் போலீஸ் என்கவுண்டரில் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் செங்குன்றம், பாடியநல்லூரில் நடைப்பயிற்சி சென்ற பார்த்திபன் வெட்டி கொலை செய்யப்பட்டார். பார்த்திபன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடியும் கூலிப்படையைச் சேர்ந்த தலைவன் முத்து சரவணன், சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். அவருடன் இருந்த சண்டே சதீஷையும் காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டனர். என்கவுண்டரில் சுடப்பட்ட சதீஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
பெரியப்பாளையம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான தனிகா மீது திருவாரூர் திமுக பிரமுகர் பூண்டி கலைசெல்வன் கொலை வழக்கு, கன்னிகைபேர் ஊராட்சி மன்ற தலைவர் திராவிட பாலு கொலை வழக்கு, அதிமுக பிரமுகர் கே.கே.நகர் விஸ்வநாதன் கொலை வழக்கு, கடந்த 2022 ஆம் ஆண்டு திமுக வட்டச் செயலாளர் செல்வம் கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் உள்ளது. திருவள்ளூரில் என்கவுண்டர் செய்யப்பட்ட முத்துசரவணன், சண்டே சதிஷ் ஆகியோரும் தனிகாவின் கூட்டாளிகள்.
இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி வழக்கில் தணிகா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்த தணிகாவிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி செங்கல்பட்டு தனிப்படை போலீசார், சென்னையில் பதுங்கி இருந்த தணிகாவை நேற்றிரவு கைது செய்து சித்தாமூர் காவல் நிலையம் அழைத்து வந்துள்ளனர்.
அப்போது செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர் பகுதியில் வந்தபோது தணிகா போலீசார் பிடியில் தப்பிப்பதற்காக காவலர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் காரில் இருந்து தப்பியோட முயற்சி செய்த போது போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் தணிகாவின் வலது கை, வலது கால் ஆகிய பகுதிகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. தொடர்ந்து அவரை மீட்ட போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதையடுத்து தணிகாவை மேல்சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.