Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Chennai Air Show 2024: சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமானப்படையின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
Chennai Air Show 2024: விமானப்படையின் சாகச நிகழ்ச்சியில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
விமானப்படையின் சாகச நிகழ்ச்சி:
இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு விழாவையொட்டி, இன்று சென்னை மெரினாவில் விமான கண்காட்சி நடைபெற உள்ளது. அதன்படி, 21 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை, இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழ்நாடு ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின், முப்படைகளின் தளபதி அனில் சவுரா உள்ளிடோர் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்காக கடந்த ஒரு வார காலமாகவே, சென்னை வான்பரப்பில் விமானப்படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
72 விமானங்கள், கண்கவர் சாகச நிகழ்ச்சிகள்:
மொத்தம் 72 விமானங்கள் இந்த சாகச நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளன. அதன்படி, சுகோய்-30 எம்கேஐ, ரஃபேல், மிராஜ் 2000, மிக்-29 மற்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போன்ற போர் விமானங்கள் சாகசம் நிகழ்த்த உள்ளன. போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் Mi-17 மற்றும் பிரசாந்த் LCH (இலகுவான போர் ஹெலிகாப்டர்) போன்ற ஹெலிகாப்டர்கள், டகோட்டா மற்றும் ஹார்வர்ட் போன்ற பாரம்பரிய விமானங்களும் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளன. அவற்றின் மூலம்,
- ஸ்கைடிவிங் திறன்
- ஆகாஷ் கங்கா.
- சூர்யகிரண் ஏரோபாட்டிக் குழு
- க்ளோஸ் ஃபார்மேஷன் லையிங்
- சாரங் ஹெலிகாப்டர் காட்சி குழு
- ஸ்டன்னிங் ஏரியல் உள்ளிட்ட சாகசங்கள் நிகழ்த்தப்பட உள்ளன.
பார்வயாளர்களுக்கான அனுமதி இலவசம்:
விமானப்படையின் சாகச நிகழ்ச்சியை காண, பொதுமக்களுக்கு இலவசம் அனுமதி வழங்கப்படுகிறது. எனவே, இந்த நிகழ்ச்சியை நேரில் கண்டுகளிக்க சுமார் 15 லட்சம் பேர் வரை, மெரினா கடற்கரையில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விஐபிக்கள் மற்றும் சிறப்பு அனுமதிச் சீட்டு பெற்றவர்களுக்கு மட்டுமே, சிறப்பு பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. மற்றபடி, பார்வையாளர்கள் அனைவருமே நின்றபடி தான் சாகச நிகழ்ச்சியை பார்வையிட வேண்டும். பொதுமக்களின் சிரமங்களை தவிர்க்கும் நோக்கில், மெரினா கடற்கரை பகுதிக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 75 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில், மெரினா கடற்கரையில் இன்று 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பார்க்கிங் வசதிகள்:
விமானப்படையின் சாகச நிகழ்ச்சியை பார்க்க வரும் பொதுமக்கள், தங்களது வாகனங்களை பார்க் செய்வதற்கு ஏதுவாக காமராஜர் சாலையை ஒட்டி 23 இடங்களில் பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
போக்குவரத்து மாற்றங்கள்:
1. காமராஜர் சாலையில், காந்தி சிலை மற்றும் போர் நினைவிடம் இடையே அனுமதி சீட்டுகள் உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. பாஸ் இல்லாத வாகன ஓட்டிகள் பார்க்கிங் ஏற்பாடுகளுக்கு ஆர்.கே.சாலைக்குப் பதிலாக வாலாஜா சாலையைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
2. திருவான்மியூரில் இருந்து காமராஜர் சாலை வழியாக பாரிஸை நோக்கி வரும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக, அவர்கள் தங்கள் இலக்கை அடைய சர்தார் படேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, அண்ணாசாலையைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதேபோல் பாரிஸில் இருந்து திருவான்மியூர் செல்லும் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாறாக, அவர்கள் தங்களுடைய இலக்கை அடைய அண்ணாசாலை, தேனாம்பேட்டை, காந்தி மண்டபம் வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
3. அண்ணா சிலையிலிருந்து MTC பேருந்துகள் வாலாஜா சாலை, திருவல்லிக்கேனி நெடுஞ்சமலை ரோடு, ரத்னா கஃபே சந்திப்பு, ஐஸ் ஹவுஸ் சந்திப்பு. டபக்டர் டேசன் சாலை. ஆர்.கே.சாலை, வி.எம். தெரு, மந்தைவெளி, மயிலாப்பூர் வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
4. இதேபோல் கிரீன்வேஸ் பாயிண்டில் இருந்து வரும் வாகனங்கள் மந்தைவெளி RA புரம் 2வது பிரதான சாலை TTK சாலை RK சாலை அண்ணாசாலையை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
5. வணிக வாகனங்கள் காமராஜர் சாலை, அண்ணாசாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, ஆர்.கே.சாலை, கதீட்ரல் சாலை, வாலாஜா சாலையில் 0700 மணி முதல் 1600 மணி வரை தடை செய்யப்பட்டுள்ளது.