சுவாமி பூஜைக்கு வழங்கிய பால் குப்பையில்... பால் முகவர்கள் சங்கம் கடும் கண்டனம்.. நடந்தது என்ன?
கோயிலுக்கு வழங்கிய பாலை குப்பையில் வீசிய கோயில் நிர்வாகியை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு ஒரு வாரத்திற்கு இலவசமாக வழங்க உத்தரவிட வேண்டும் என பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு நடைபெற்ற சிவராத்திரியை முன்னிட்டு சென்னை, வில்லிவாக்கம் பகுதியில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோயிலில் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்வதற்கு பக்தர்கள் வழங்கிய பால் பாக்கெட்டுகளில் சுமார் நூற்றுக்கணக்கான ஆவின் பால் பாக்கெட்டுகள் அப்பகுதியில் உள்ள குப்பையில் வீசப்பட்டிருந்த தகவல் கடும் அதிர்ச்சி அளிக்கிறது என பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
கண்டனம்:
இறை நம்பிக்கை கொண்ட பக்தர்கள் சிவராத்திரி தினத்தில் தங்களின் நம்பிக்கைக்குரிய இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்வதற்காக அளவிற்கு அதிகமாக தானமாக வழங்கிய பால் பாக்கெட்டுகளை பத்திரமாக எடுத்து வைத்து, அதனை முறையாக குளிர்சாதன பெட்டியில் வைத்து பராமரிக்காமல் மெத்தனமாக செயல்பட்டு, பால் பாக்கெட்டுகள் கெட்டுப் போன நிலையில், இறைவனின் பெயரால் எண்ணற்ற ஆவின் பால் பாக்கெட்டுகளை வீணடித்த கோவில் நிர்வாகத்தை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
ஆண்டுக்கு சுமார் 210 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டு, உலகளவில் 21 சதவிகிதத்துடன் இந்தியா முதலிடத்தில் இருந்தாலும் கூட இன்னும் ஏழை, எளிய மக்களுக்கும், பச்சிளம் குழந்தைகளும் தேவையான ஊட்டச்சத்திற்கான பாலின் அளவு முழுமையாக கிடைக்காத சூழலே நிலவி வரும் நிலையில் இறைவன் பெயராலும், நடிகர்களின் உயிரற்ற கட்அவுட்டுகளுக்கும் பால் அபிஷேகம் செய்கிறோம் என்கிற பெயரில் பாலினை வீணடிப்பதை மனிதநேயம் கொண்ட எவராலும் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள முடியாது.
”சிகிச்சை பெறுவோருக்கு வழங்க வேண்டும்”
எனவே சென்னை, வில்லிவாக்கம், அகஸ்தீஸ்வரர் கோவிலுக்கு சிவராத்திரி தினத்தில் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்வதற்காக பக்தர்கள் வழங்கிய பால் பாக்கெட்டுகளை குப்பையில் வீசிய கோவில் நிர்வாகி யார்..? என்பதை கண்டறிந்து அவருக்கு தண்டனை வழங்கக் கூடிய வகையில் ஐசிஎப் பகுதிக்கு அருகில் உள்ள காந்தி நகர் அரசு புறநகர் மருத்துவமனையிலும் மற்றும் அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனையிலும் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவோருக்கு ஒரு வார காலத்திற்கு பாலினை காய்ச்சி இலவசமாக வழங்கிட உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
ஏழையின் சிரிப்பில் இறைவன்:
இறைவன் பெயராலும், உயிரற்ற கட்அவுட்டுகளுக்கும் பாலாபிஷேகம் செய்து பாலினை வீணடிப்பதையும், விஷேச நாட்களில் பொதுமக்கள் அனைவரும் இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்ய பால் பாக்கெட்டுகள் வாங்கி கொடுப்பதையும் தவிர்த்து, ஊட்டச்சத்து கிடைக்காமல் அல்லல்படும் ஏழை, எளிய மக்களுக்கும், பச்சிளம் குழந்தைகளுக்கும் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கும் இறைவனுக்கு உகந்த விசேஷ நாட்களில் இலவசமாக பாலினை காய்ச்சி வழங்கி ஏழையின் சிரிப்பில் இறைவனை காணுமாறு, பொதுமக்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத்தின் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.