CM Stalin : குளு குளு குற்றாலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. இன்றைய ப்ளான் இதுதான்..!
தென்காசி மாவட்டத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தென்காசியில் முதலமைச்சர்
தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதிகை விரைவு ரயில் மூலமாக சென்னையில் இருந்து நேற்று இரவு புறப்பட்டு இன்று காலை 7.30 மணிக்கு தென்காசி வந்தடைந்தார். அவர்களுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நலத்திட்டங்கள் என்னென்ன?
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வரும் அரசு விழாவில் தமிழக முதலமைச்சர் நிறைவடைந்த பணிகளை திறந்து வைத்தும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகளை வழங்க உள்ளார். தென்காசி மாவட்ட கணக்கப்பிள்ளை வலசையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.
34 அரசுத் துறைகள் சார்ந்த ஒரு லட்சத்து 3,508 பயனாளிகளுக்கு ரூ.182.56 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கான கூடுதல் கட்டடம், உள்ளாட்சி அமைப்புகளுக்கான கட்டடங்கள் உள்ளிட்ட ரூ. 34.14 கோடி மதிப்பில் 23 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைக்கிறார். 11 துறை சார்ந்த ரூ. 22.20 கோடி மதிப்பிலான 57 நிறைவுற்ற திட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார். மொத்தமாக ரூபாய் 238.90 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.
போக்குவரத்து மாற்றம்
இன்று காலை 07.30 மணி முதல் முதல்வர் வாகனம் கடந்து செல்லும் வரை குற்றாலம் வழியாக தென்காசி செல்லும் வாகனங்கள் இராமாலயம், காசிமேஜர்புரம்,இலஞ்சி, கேகே வலசை வழியாக செல்ல வேண்டும். மேலும், கடையநல்லூர் செல்லும் வாகனங்கள் செங்கோட்டை, பண்பொழி,வடகரை, அச்சன்புதூர் வழியாக செல்ல வேண்டும். மங்களாபுரம் வழியாக வருபவர்கள் அச்சன்பட்டி, வேலாயுதபுரம், சாம்பவர்வடகரை, சுரண்டை, பாவூர்சத்திரம்,ஆசாத் நகர்,மத்தளம் பாறை, பழைய குற்றாலம் செல்லலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்பு
இந்நிலையில் தென்காசி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் மேற்பார்வையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தென்காசி ரயில் நிலையம் முதல் குற்றலாம், விழா மேடை மற்றும் மாவட்ட எல்லை வரையிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் படிக்க