"சும்மா சொன்னேன்.. உதயநிதிய எனக்கு தெரியாது" மெரினாவில் காவலர்களை இழிவாக பேசிய சந்திரமோகன்!
சென்னை மெரினாவில் காவலர்களுடன் ரகளையில் ஈடுபட்ட சந்திரமோகன், தற்போது மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டுள்ளார். துணை முதல்வர் உதயநிதியை தெரியும் என தெரியாமல் சொல்லிவிட்டதாக மன்னிப்பு கேட்டார்.
சென்னை மெரினா Loop சாலையில் நேற்று நள்ளிரவு காவலர்களுடன் தகராறு செய்த சந்திரமோகன், தனது தவறினை உணர்ந்து மன்னிப்பு கோரியுள்ளார்.
அளவுக்கு அதிகமாக மதுபோதையில் இருந்ததால் நிதானம் இல்லாமல் நடந்து கொண்டதாகவும் இனி அப்படி பேச மாட்டேன் எனக் கூறி மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். அதை, சென்னை மாநகர காவல், எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
மெரினாவில் காவலர்களை இழிவாக பேசிய ஜோடி:
சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில் நேற்று நள்ளிரவு கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. காரில் இருந்த ஜோடியிடம், காரை அங்கிருந்து எடுக்குமாறு ரோந்தில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அப்போது மதுபோதையில் இருந்த அந்த ஜோடி, காவல்துறையினரை இழிவாக பேசி ‘உதயநிதியை கூப்பிடுவா’ எனக்கேட்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ரோந்து காவலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகளை அந்த ஜோடி இழிவாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
பின்னர், அந்த ஜோடி குறித்து மெரினா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில், அவர்கள் சந்திரமோகன், தனலட்சுமி என தெரிய வந்தது. மேலும், அவர்கள் வேளச்சேரியில் உள்ள விடுதியில் தங்கி இருந்ததும் காவல்துறைக்கு தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்த மயிலாப்பூர் காவல்துறை, விசாரணை மேற்கொண்டது.
மன்னிப்பு கேட்ட சந்திரமோகன்:
இந்த நிலையில், தான் செய்தது தவறு எனக் கூறி சந்திரமோகன் மன்னிப்பு கோரினார். "அளவுக்கு அதிகமாக மதுபோதையில் இருந்ததால் நிதானம் இல்லாமல் காவல்துறையினரை தகாத வார்த்தையால் பேசிவிட்டேன்; இனி இதுபோல் பேசமாட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்" என அவர் கூறினார்.
மேலும் பேசிய சந்திரமோகன், "துணை முதல்வர் உதயநிதியை தெரியும் என சொல்லிவிட்டேன். காவல்துறை ஆய்வாளரை தெரியும் என சொல்லிவிட்டேன். அவர்கள் யார் என்று எனக்கு தெரியாது. சும்மா சொன்னேன்" என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!