Rain | 6 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு..!
அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், வெப்ப சலனம் மற்றும் காற்றின் திசை வேக மாறுபாட்டு காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தை பொறுத்தவரை திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் உள்மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நகரின் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
நாளைய தினத்தை பொறுத்தவரை கடலோர மாவட்டங்கள், சென்னை, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ஜூன் 29ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வரும் ஜூலை ஒன்றாம் தேதி நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மேற்கு தொடர்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களான கோவை, தென்காசி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் நடுவட்டம், சேலம் மாவட்டம் கெங்கவல்லி, ஏற்காடு, வேலூர் மாவட்டம் மேலாளத்தூர், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதிகளில் தலா 2 செண்டீமீட்டரும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர், நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி, கோவை மாவட்டம் சின்னக்கல்லார், திருவண்ணாமலை மாவட்டம் போளூர், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை, திண்டுக்கல் மாவட்டம் நத்தம், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் தலா ஒரு செண்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்படுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ வரை விசக்கூடும் என்பதால் இன்று முதல் நாளை வரையும், தென்மேற்கு மத்திய மேற்கு வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் வரும் ஜூன் 29ஆம் தேதி முதல் வரும் ஜூலை 1ஆம் தேதி வரை பலத்த காற்றானது மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ வரை வீசக்கூடும் என்பதால் மேற்கண்ட தேதிகளில் மேற்கண்ட கடற்பரப்பிற்கு மீன்பிடிப்பதற்காக மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது