Thangam Thennarasu: தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு எதுவுமே உதவவில்லை - நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி
மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு எந்த வகையிலும் உதவி செய்யவில்லை என தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு பாதிப்புக்கு மத்தியில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த காலத்தில் இருந்து மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு எந்த வகையிலும் உதவி செய்யவில்லை என தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மேலும் ஆட்சிக்கு வந்ததும் மகளிருக்கு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயன திட்டத்தினை அறிமுகப்படுத்தியது. ஒரு கோடியே 13 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 உரிமைத் தொகை வழங்கி வருகின்றது. மிக்ஜாம் புயல் பாதிப்பு மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளினால், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 6,000 நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் தமிழ்நாடு அரசிக்கு ஒன்றிய அரசின் உதவி என்பதே இல்லாமல் உள்ளது. இது குறித்து அவர் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், “ ஒன்றிய அரசு கடந்த 2014-15 நிதி ஆண்டில் இருந்து 2022- 2023ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ 4.75 கோடி ரூபாய் தமிழ்நாட்டிற்கு வழங்கியுள்ளது. இதில் 2.46 லட்சம் கோடி என்பது மத்திய வரிப்பகிர்வாகும். அதேபோல் 2.28 கோடி ரூபாய் என்பது தமிழ்நாட்டிற்கு கிடைக்கவேண்டிய மானியங்கள் மற்றும் உதவித்தொகைகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. அதேநேரத்தில் ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசிடம் இருந்து நேரடி வரி வருவாயாக வசூலித்த தொகை 6.23 லட்சம் கோடி ரூபாய். மறைமுகமாக வசூல் செய்த வரி வருவாய் குறித்து ஒன்றிய அரசு இதுவரை பகிர்ந்துகொள்ளவில்லை.
நான் ஏற்கனவே சட்டப்பேரவையில் குறிப்பிட்டு பேசியதைப் போல் நாம் செலுத்தும் ஒவ்வெரு ஒரு ரூபாய்க்கும் நாம் திரும்பப் பெறுவது வெறும் 29 பைசாக்கள்தான். ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த விகித்தாசாரம் என்பது முற்றிலும் வேறுபட்டதாக இருக்கின்றது. உதாரணத்திற்கு பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் 2014- 2015 நிதியாண்டு முதல் 2022-2023 நிதியாண்டு வரை 2.23 லட்சம் கோடிதான் ஒன்றிய அரசுக்கு அவர்கள் கொடுக்கின்றார்கள் என்றால் அவர்களுக்கு ஒன்றிய அரசு கொடுக்கும் நிதி எவ்வளவு என்று பார்த்தால், 15. 35 லட்சம் கோடியாக சில மாநிலங்களில் உள்ளது. உதாரணத்திற்கு உத்திரபிரதேசம். 12வது நிதிக்குழு இருந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிதி என்பது 5.305 சதவீதமாக இருந்தது, ஆனால் தற்போது உள்ள 15வது நிதிக்குழுவில் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிதி என்பது 4. 079 சதவீதமாக உள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய உரிய நிதி வரவில்லை என்பதை காட்டுகின்றது.
தமிழ்நாட்டினைப் பொறுத்தவரையில் ஒன்றிய அளவில் உள்ள மக்கள் தொகையில் 6.124 சதவீதமாக உள்ளது. இப்படியான நிலையில் நிதிக்குழுவில் இருந்து நமக்கு கிடைக்ககூடிய நிதி என்பது 4.079ஆக உள்ளது. அதேபோல் ஒன்றிய அரசு செஸ் மற்றும் சர்ச்சார்ஜ் எனவும் வரி வசூலில் ஈடுபட்டு வருகின்றது. இதில் 2011-12ஆம் நிதி ஆண்டில் இந்த சர்ச்சார்ஜ் வசூல் என்பது நடப்பு நிதியாண்டில் 28.1 சதவீதமாக மாறியுள்ளது என கூறியுள்ளார்.