Cauvery Water: காவிரி தண்ணீரை தர மறுத்த கர்நாடகா...உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல்...!
கர்நாடகா காவிரி நீரை திறந்துவிட மறுத்த நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
கர்நாடகா காவிரி நீரை திறந்துவிட மறுத்த நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் மனு
ஜூன், ஜூலை மாதங்களில் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய 28.8 டி.எம்.சி நீரை திறந்துவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது தமிழ்நாடு அரசு. தற்போது 24 ஆயிரம் கன அடி நீர் விகிதம் தண்ணீரை உடனடியாக திறந்து விட கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும். அதேபோல வரும் மாதம் திறக்க வேண்டிய 36.76 டி.எம்.சி நீரை காலம் தாழ்த்தாமல் உரிய நேரத்தில் திறந்து விடவும் கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும். இந்த விவகாரத்தில் காவிரி நீர் ஆணையத்தையும் ஒரு எதிர் மனுதாரராக இணைத்து உரிய உத்தரவை ஆணையத்துக்கும் உச்சநீதிமன்றம் வழங்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி உரிய நீரை திறந்து விடக் கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். காவிரி ஆணையம் பாகுபாட்டோடும், ஒரு தலை பட்சமாகவும் செயல் படக் கூடாது என உத்தரவிட வேண்டும்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறும் கர்நாடகா அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளது தமிழ்நாடு அரசு. மேலும், 113 பக்கங்களை கொண்ட விரிவான மனுவை தாக்கல் செய்தது தமிழ்நாடு அரசு. காவிரி நீர் விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் எழுதிய கடிதங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தமிழ்நாடு அரசு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.
நதி நீர் பங்கீடு:
காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, கடந்த 9ஆம் தேதி வரை 37.9 டி.எம்.சி தண்ணீர் வரையில் தமிழ்நாட்டுக்கு கர்நாடகா தர வேண்டும். ஆனால், 3 டி.எம்.சி. தண்ணீர்தான் வழங்கியுள்ளதாக தெரிகிறது. இதனால், தமிழகத்திற்கான நீரை உடனடியாக வழங்க வேண்டும் என கர்நாடக அரசை, மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இன்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
காவிரி மேலாண்மை கூட்டம்:
சமீபத்தில், டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22வது கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் சார்பில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமை வகிக்கும் நிலையில், தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 38 டி.எம்.சி தண்ணீரை உடனே திறக்க தமிழக அரசு வலியுறுத்தியது. ஆனால், கர்நாடக அரசு அதை ஏற்க மறுத்ததால் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே தமிழக அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.