Cauvery Water: ’தண்ணீர் திறந்தே ஆகணும்’...கர்நாடகாவுக்கு உத்தரவு போட்ட காவிரி மேலாண்மை ஆணையம்!
தமிழகத்திற்கு வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Cauvery Water: தமிழகத்திற்கு வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. .
காவிரி பிரச்னை:
தமிழ்நாட்டின் டெல்டா பகுதி விவசாயத்திற்கான தண்ணீரை தர கர்நாடகா மறுப்பது என்பது தொடர்கதையாகி வருகிறது.ஒவ்வொரு முறையும் காவிரி மேலாண்மை ஆணையத்தையும், உச்சநீதிமன்றத்தையும் நாடி தான் பெற வேண்டியதாக உள்ளது. இந்த முறையும் கூட சம்பா சாகுபடிக்காக தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடக அரசு தரவில்லை. அதன்பிறகு, தமிழ்நாடு அரசின் பல்வேறு முயற்சிகளால் காவிரி டெல்டா பாசனத்துக்கு கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்த நிலையில் அதனை கர்நாடக அரசு திடீரென குறைத்தது.
காவிரி ஆணைய உத்தரவுப்படி செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 15 வரை தமிழகத்திற்கு விநாடிக்கு 3,000 கனஅடி தண்ணீர் திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், தண்ணீரின் அளவு குறைந்துவிட்டதாக கர்நாடக அரசு கூறியது. இதனால், காவிரி நீர் விவகாரத்தில் இருமாநிலங்களுக்கும் இடையேயான பிரச்னை பூதாகரமாக வெடித்தது.
தண்ணீர் தராத கர்நாடகா அரசு:
இரண்டு தினங்களுக்கு முன்பாக காணொலி வாயிலாக நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில், வரும் 16ம் தேதி காலை 8 மணி முதல் 31ம் தேதி வரை வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு திறந்து விட வேண்டும் என கர்நாடகத்தை ஒழுங்காற்றுக்குழு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். காவிரி நதிநீர் பங்கீட்டில் ஒழுங்காற்றுக்குழு அந்தந்த மாநிலங்களுக்கு தங்களது முடிவை வேண்டுகோளாக அல்லது பரிந்துரையாக மட்டுமே வைக்க முடியும். இந்த பரிந்துரையை மாநிலங்கள் ஏற்று செயல்பட்டால், காவிரி மேலாண்மை ஆணையம் தலையிடாது. ஏற்றுக்கொள்ளாத நிலை ஏற்படும் பட்சத்தில் மேலாண்மை ஆணையம் தலையிடும்.
3,000 கனஅடி நீர் திறக்க ஆணை:
அதன்படி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 26வது கூட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு டெல்லியில் உள்ள அதன் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டுக்கு 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வலியுறுத்தப்போவதாக மாநில நீர்வள அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழகத்திற்கு வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 16ஆம் தேதி முதல் 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்று கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்திற்கு அக்டோபர் 16ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 3,000 கனஅடி காவிரி நீர் திறக்க ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருந்த நிலையில, மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க
Vachathi Case: வாச்சாத்தி விவகாரத்தில் திருப்பம்... உச்ச நீதிமன்றத்தின் உதவியை நாடும் குற்றவாளிகள்!