Captain Vijayakanth: ”என்னை ஆட்சியில் அமரவையுங்கள்” என கேப்டனிடம் கேட்ட கலைஞர் - இயக்குநர் ஆர்.கே. செல்வமணி
Captain Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் குறித்து இயக்குநர் ஆர்.கே. செல்வமணி பேசியதை இந்த தொகுப்பில் காணலாம்.
2023ஆம் ஆண்டில் தமிழ்நாடு எத்தனையோ இன்னல்களை எதிர்கொண்டுள்ளது. இதில் எல்லாம் பாதிக்கப்பட்டவருக்கு அருகில் இருப்பவர்கள் ஆறுதல் கூறி தேற்றி வந்தனர், அல்லது உதவி செய்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர். ஆனால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ள துயரச் சம்பவம் என்றால் அது தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த்தின் மறைவுதான். இவரது மறைவு அனைவரது மத்தியிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது எனக் கூறத்தான் வேண்டும். மறைந்த கேப்டன் விஜயகாந்த் குறித்து இயக்குநர் ஆர்.கே. செல்வமணி பேசியது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள்
”திரையுலகில் அள்ளிக் கொடுத்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அதனை எங்களுக்கெல்லாம் சொல்லிக் கொடுத்தவர் புரட்சித் கலைஞர் விஜயகாந்த்” இப்படி குறிப்பிட்டுவிட்டுத்தான் விஜயகாந்த் குறித்து பேச்சை துவங்குவார் நடிகர் சத்யராஜ்.
தமிழ்நாடு மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் எங்கு பிரச்னை நடந்தாலும் சரி, குஜராத் நிலநடுக்கம் தொடங்கி கார்கில் போர் வரை, முதலில் உதவித்தொகை கொடுப்பவர் விஜயகாந்த். அதன் பின்னர்தான் திரையுலகின் மற்ற நடிகர்கள் கொடுப்பார்கள். ஈழப்போர் மிகவும் உச்சம் தொட்ட காலத்தில் பெரியார் திடலில் மறைந்த இயக்குநர் மணிவண்ணனின் இயக்கத்தில் நாடகம் ஒன்றில் நடித்து, பணம் வசூல் செய்து ஈழத்துக்கு அனுப்பினார். கேட்காமலே உதவி செய்பவர் விஜயகாந்த். நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது ஒரு விழாவிற்கு மனோரமாவை அழைக்கச் சென்று விட்டு, திரும்புகையில் ஒரு பெண்ணிடம் ஒருவர் செயினை திருடிவிட்டுச் சென்று விட்டார். உடனே அந்த திருடனைத் துரத்தி, அடித்து செயினை மீட்டுக் கொடுத்த நிஜ ஹீரோ விஜயகாந்த். இது அவரது துணிச்சலுக்கு எடுத்துக்காட்டு. மதுரையில் இருந்து ஒரு நடிகர் சங்க நிகழ்ச்சியை முடித்துவிட்டு ரயிலில் திரும்புகையில் அனைவருக்கும் பசி. ரயிலை நிறுத்தி அனைவருக்கும் கொத்து புரோட்டாவும் சிக்கன் கறியும் அள்ளிக்கொண்டு வந்தவர். விஜயகாந்த் நன்றாக இருந்தால் தமிழ்நாட்டில் பல குடும்பங்கள் நன்றாக இருக்கும் என சத்தியராஜ் ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
கேப்டன் விஜயகாந்த்
இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, “ஈழப்போராட்டத்தினை முதலில் நடத்திய நடிகர் விஜயகாந்த்தான். கேப்டன் பிரபாகரன் என்ற பெயரினைச் சொன்னபோது வாரி அணைத்துக்கொண்ட நடிகர். படத்தினை ஒரு படமாக எடுப்பதைவிட தமிழ் இனத்தின் தலைவனை (விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன்) அனைவரிடத்திலும் கொண்டு சேர்க்கவேண்டும் என்ற எண்ணத்தில் இந்த படத்தினை உருவாக்க வேண்டும் என்றவர் விஜயகாந்த். கேப்டன் விஜயகாந்திடம் இருந்து ரசிகர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய குணாதிசயங்களில் ஒன்று தாய் உள்ளம், தைரியம்.
கலைஞர் கருணாநிதிக்கு பொன்விழா நடத்த அனைத்து சினிமா சங்கங்களும் மறுத்துவிட்டது. ஆனால் நடிகர் சங்கத்தின் சார்பில் நாம் நடத்தலாம் என விஜயகாந்த் கூறினார். ஆனால் அன்றைக்கு ஆட்சியில் இருந்த ஜெயலலிதா பாதுகாப்பு பணிகளுக்கு கூட போதுமான அளவு காவலர்களை அனுப்பவில்லை. லட்சம் பேர் திரண்ட அந்த பொன்விழாவிற்கு மொத்தமாகவே 20 முதல் 30 பேர்தான் காவலர்கள் இருந்தனர். கலைஞர் கருணாநிதி மேடையில் இருந்தபோது வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு கீழே இறங்கிய விஜயகாந்த் ஒட்டுமொத்த கூட்டத்தையும் கட்டுப்படுத்தினார். இதனைப் பார்த்து இவரைப் போன்று அனைவரும் தைரியமாக இருக்கவேண்டும். பொன்விழாவில் விஜயகாந்திடம் பேசிய கலைஞர் ’மெரினாவுக்கு அழைத்து வந்து அமர வைத்து விட்டீர்கள் அப்படியே கோட்டையிலும் அமரவைத்து விடுங்கள் என கேட்டார். அதேபோல் அடுத்த தேர்தலில் கலைஞர் முதலமைச்சரானார். அன்றைக்கு கேட்கும் இடத்தில் கலைஞர் இருந்தார். இவரின் தைரியத்திற்கு மிகவும் முக்கியமான மற்றொரு உதாரணம். விழுப்புரத்தில் ரசிகர்கள் மன்ற கொடியினை பாமகவினர் வெட்டி விட்டனர். இதனால் விஜயகாந்த் ரசிகர்களுக்கு கொஞ்சம் பயம் வந்து விட்டது. ஆனால் அடுத்தநாள் ரசிகர் மன்ற கொடி வெட்டப்பட்ட அதே இடத்தில் கொடியை நட்டினார் விஜயகாந்த்.
ஆங்கிலம் தெரியவில்லை என வெட்கப்பட்டதில்லை
ஆங்கிலம் தெரியவில்லை என்று ஒருபோதும் வெட்கப்படமாட்டார். நடிகைகள் தமிழ் தெரியாமல் ஆங்கிலத்தில் பேசும்போது, இவரால் பதில் பேச முடியாது. உடனே நடிகைகள் உங்களுக்கு ஆங்கிலம் தெரியாதா எனக் கேட்டால், தமிழ் படம்தானே நடிக்க வந்திருக்க.. நீ போய் தமிழ் கத்துக்கிட்டு வா’ என்பார். உண்மையிலேயே அவருக்கு ஊழல் செய்யத் தெரியாது. அராஜகம் செய்யத் தெரியாது. பொய் சொல்லத் தெரியாது என இயக்குநர் ஆர்.கே. செல்வமணி பேசியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்ததையடுத்து விஜயகாந்த் குறித்து பல்வேறு திரையுலகினர் பேசிய வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றது.