’பசு ஈன்ற அரையடி கன்றுக்குட்டி’ தாய்மடி சேர முடியாமல் தவிப்பு..!
உயரம் குறைந்து பிறந்துள்ளதால், பசு மடியில் உள்ள பாலை குடிக்க முடியாமல் தவித்து வருகிறது கன்றுக்குட்டி
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே நலன் புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன் என்ற விவசாயி. இவர் வீட்டு பசுவொன்று, மூன்றாவது முறையாக கன்று ஒன்றை ஈன்றுள்ளது. ஆனால் அந்த கன்று உயரம் குறைவாக தரையோடு தரையாக தவழ்ந்து செல்லும் அளவுக்குதான் இருக்கிறது. இதனால் தாய் பசுவிடம் பால் குடிக்க முடியாமலும் நடக்க முடியாமலும் தவித்து வருகிறது அந்த கன்று.
இவ்வாறு இருக்கும் கன்றை பார்த்து கண்ணீர் வடிக்கிறது தாய்ப்பசு. இதனால் பசுவை வைத்திருக்கும் விவசாயி விஜயன் குடும்பத்தினர் மிகப்பெரிய சோகத்தில் ஆழ்ந்துள்ளனர், இந்த மாதிரியான ஒரு சம்பவம் அவர்களுக்கு மிகவும் கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஏற்கெனவே இதே பசு இரண்டு கன்றுகளை ஈன்றுள்ளது ஆனால் அந்த கன்றுகள் சரியான அளவில்தான் இருந்துள்ளன, தற்பொழுது ஈன்ற இந்த மூன்றாவது கன்றுக்குடி மட்டுமே உயர குறைபாடுடன் பிறந்துள்ளது.
இந்த பசுவிற்கு குமராட்சி அரசு கால்நடை மருத்துவமனை மூலம் கால்நடை மருத்துவர் ஜெர்ஸி வகை சினை ஊசி செலுத்தப்பட்டு சினை பிடித்துள்ளது. இந்நிலையில் அந்த பசு ஈன்ற 3வதுகன்று இப்படி அரை அடி அளவு மட்டுமே உயரம் கொண்டதாக பிறந்துள்ளது அந்த குடும்பத்தினரை மட்டுமின்றி அந்த பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பசு கன்றை ஈன்றதும், கொழும்புகளையும், வாயில் இருக்கும் வயலைகளையும் எடுத்துவிட்டு முதலில் சீம்பால் குடுக்க விடுவது வழக்கம். முதலில் கன்றின் தூக்கி நிறுத்தி, பசு மடி காம்பை வாயில் பிடித்து சீம்பாலை இழுத்து குடிக்க விடுவர். சீம்பால் சுவையை கண்டுக்கொண்ட கன்று அதன்பிறகு தானே எழுந்து மடியை முட்டி பால் குடிக்கத் தொடங்கும். ஆனால், உயரம் குறைந்து பிறந்துள்ள இந்த கன்றுக்குட்டியை கையில் தூக்கிக்கொண்டாலும் பசுவின் பால் குடிக்க திணறி வருகிறது.
இப்படியான சூழலில் கால்நடை மருத்துவமனையில் ஜெர்ஸி வகை சினை ஊசி போடப்பட்டதால்தான் இவ்வாறு குறைபாடுடன் இந்த கன்று பிறந்துள்ளதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இவ்வாறு அறையடியே உள்ள கன்றுக் குட்டியை இதுவரை யாரும் அதிகம் பார்த்ததில்லை என்பதால் இந்த கன்றுக்குட்டியினை பார்க்க சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மக்கள் அந்த பகுதியில் தொடர்ச்சியாக வந்தவண்ணம் உள்ளனர், இவ்வளவு சிறியதாக உள்ள கன்றுக்கட்டியினை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாகவும் சற்றே வருத்ததுடனும் கண்டு செல்கின்றனர். குழந்தைகளை விட மிகக் குறைவான உயரத்தில் இருப்பதால் அந்தக் கன்றுக்குட்டியின் மீது அந்த குடும்பத்தினர் அதிக பாசத்துடனும் அக்கறையுடனும் அந்த கன்றுக்குட்டியினை பராமரித்து வருகின்றனர்.
கன்றானது நடக்க முடியாமல் அவதிப்பட்டு வருவதால் அதனை நடக்க வைக்க பயிற்சி அளிக்கின்றனர். அதோடு பசுவின் மடி காம்பை பிடித்து பால் குடிக்க முடியாமல் தவிக்கும் கன்றுக்குட்டிக்கு, பாலை பீய்ச்சி பாட்டிலில் அடைத்து புகட்டி வருகின்றனர். இந்த கன்றுக்குட்டிக்கு கால்நடை மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து நடக்க வைக்க வேண்டும் என அந்த குடும்பத்தினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.