எங்கள் தலைவர் விஜய்தான் அறிவிப்புகளை வெளியிடுவார்; என்னுடைய பணி இதுதான் - புஸ்ஸி ஆனந்த்
பொதுச் செயலாளர் என்பது தலைவருக்கு அடுத்த பதவியாகும். ஆனால் எங்கள் தலைவராக இருக்கும் விஜய்தான் கட்சி தொடர்பாக தெரிவிப்பார்.
“நான் இருப்பது பொதுச் செயலாளர் என்ற பதவிதான். நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது மட்டுமே என்னுடைய பணி; அறிவிப்புகள் அனைத்துமே தலைவர்தான் வெளியிடுவார் என்று தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார்.
சுதந்திரப் போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடலூர் முதுநகரில் உள்ள அஞ்சலையம்மாள் சிலைக்கு தமிழக வெற்றிக் கழகம் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் பெண்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நிருபர்களிடம் பேட்டி அளித்ததாவது: -
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கழக மகளிர் அணி, இளைஞரணி, மாணவரணி, நகரம், ஒன்றியம் மற்றும் பல்வேறு அணி நிர்வாகிகள் அஞ்சலை அம்மாள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். தமிழக வெற்றிக் கழகத்தில் எத்தனை உறுப்பினர்கள் சேர்ந்து வருகிறார்கள் என்பது அனைவரும் தெரிந்ததாகும். அதனை கண்டிப்பாக தெரிவிப்போம். பொதுச் செயலாளர் என்பது தலைவருக்கு அடுத்த பதவியாகும். ஆனால் எங்கள் தலைவராக இருக்கும் விஜய்தான் கட்சி தொடர்பாக தெரிவிப்பார். நான் நலத்திட்ட உதவிகள் வழங்குவது, தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவது, ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றேன். ஆகையால் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக எதுவாக இருந்தாலும் தலைவர் விஜய் தான் அறிவிப்பார். தளபதி விலையில்லா விருந்தகம், ரொட்டி, பால், முட்டை திட்டம், தளபதி பயிலகம், இலவச சட்ட ஆலோசனை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. மேலும் தினந்தோறும் 10 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர் என தெரிவித்தார்.