'ரஃபேல் வாட்ச் பில் எப்போது வெளியிடப்படும்?’ - அண்ணாமலை புது விளக்கம்
"ரஃபேல் வாட்ச் பில் என்னிடம் தான் உள்ளது. இந்த வாட்சைப் பற்றி தற்போது சமூக வலைதளங்களில் தான் பேசுகின்றனர். இந்த வாட்ச் பற்றி மக்கள் டீக்கடையில் பேசும் போது பில்லை வெளியிடுவேன்.”
கோவை குறிச்சி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து மேடையில் பேசிய அண்ணாமலை, ”திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பாஜகவில் இதுவரை இல்லாத அளவிற்கு எழுச்சி ஏற்பட்டுள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜகவிற்கு 25 எம்.பி.க்களுக்கு மேல் கிடைக்கும். ரஃபேல் வாட்சை வைத்தே 25 எம்.பி.க்களை வாங்கி விடலாம்.
தமிழகத்தில் 70 ஆண்டுகளாக ஊழல் நடைபெறுகிறது. இதுவரை ஊழலைப் பற்றி பேச வாய்ப்பு இல்லாமல் இருந்தது. ரஃபேல் வாட்ச் பில் என்னிடம் தான் உள்ளது. இந்த வாட்சைப் பற்றி தற்போது சமூக வலைதளங்களில் தான் பேசுகின்றனர். இந்த வாட்ச் பற்றி மக்கள் டீக்கடையில் பேசும் போது பில்லை வெளியிடுவேன். திமுக 2 இலட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது. கருணாநிதி இருந்திருந்தால் நமக்கு இவ்வளவு வாய்ப்பு கிடைத்திருக்காது. 2 ஜி வழக்கால் 10 ஆண்டுகள் ஆட்சிக்கு வர முடியாமல் திமுக இருந்ததை போல, நாடாளுமன்ற தேர்தலில் ரஃபேல் வாட்ச் முக்கிய பங்காற்றும்.
திமுகவினர் இந்த வாட்ச் பற்றி பேச வேண்டும் என காத்துக் கொண்டிருக்கிறோம். இப்போது ரஃபேல் வாட்ச் பற்றி 2, 3 அமைச்சர்கள் தான் பேசுகின்றனர். ஒவ்வொரு அமைச்சர்களும் பேச வேண்டும். திமுக அமைச்சர்கள் பினாமிகள் சொத்துகள் பற்றி பொதுமக்கள் பதிவிட வெப்சைட், ஆப் உருவாக்கப்பட்டு வருகிறது. அதில் அமைச்சர்களின் பினாமி சொத்து விவரங்களை சேகரித்து வெளியிடுவோம். ஒரேநாளில் அரசியல் புரட்சியை ஏற்படுத்துவோம்.
திமுக அமைச்சர்களின் சொத்து மதிப்பு 2 இலட்சம் கோடி ரூபாயை தாண்டும். ஒவ்வொரு அமைச்சர்களின் சொத்து பட்டியலை வெளியிடுவோம். 2 இலட்சம் கோடியா? வாட்ச் பில்லா என மக்கள் பேசட்டும். முதல்வரைப் பற்றி பேசும் தைரியம் நமக்கு மட்டும் தான் உள்ளது. ஏப்ரலில் தமிழகத்தில் பாஜக நடைபயணம் நடைபெறும். பாஜக நிர்வாகிகள் உள்ள பகுதிகளில் பூத் கமிட்டி இல்லையென்றால் அவமானம். திமுகவை பற்றி மக்களிடம் கோபம் உள்ளது. அதை பூத் கமிட்டி மூலமாக வாக்காக மாற்ற வேண்டும்.
பாஜகவினர் கையில் இருக்கும் பணத்தை இழந்து கட்சியை வளர்த்து கொண்டிருக்கிறோம். நாடாளுமன்ற தேர்தல் பாஜகவினருக்கு டூ ஆர் டை காலகட்டத்தில் உள்ளோம். ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்தை முடிவுகட்ட வாய்ப்பு வந்துள்ளது. 2024 ம் ஆண்டில் திமுகவிற்கு முடிவுரை எழுதப்படும். மக்கள் மனது பாஜக பக்கம் திரும்பி விட்டது. எந்த பொறி வைத்தால், எந்த எலி பிடிபடும் என்பது எங்களுக்குத் தெரியும். பூத் கமிட்டி பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்