முதலமைச்சரின் அவசர கவனத்திற்கு...!
வ.உ. சிதம்பரம் பிள்ளை, வ.உ. சிதம்பரனாராக இருக்கும்போது, டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மட்டும் ஏன் முத்துலெட்சுமியாக மட்டும் இருக்க கூடாது?
சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி விவாதத்தை பார்த்து கொண்டிருந்தேன். பல நாள்களுக்கு முன்பு ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியின் மறுஒளிபரப்பு அது. மற்ற மாநிலங்களில், சாதி பெயரை சேர்த்து கொண்டோர் ஒரு பக்கம். சாதி பெயரை பயன்படுத்தாதே என கூறுவோர் ஒரு பக்கம். வர்க்க போராட்டத்தை முன்னிறுத்தி, முற்போக்கு அரசியலை பேசும் கம்யூனிஸ்ட இயக்கங்கள் பல காலமாக ஆண்டு வரும் கேரளாவை சேர்ந்த நடிகை விருந்தினராக பார்வதி அதில் பங்கேற்றிருந்தார்.
சாதி பெயரை பயன்படுத்தும் கேரளா:
"தொடக்க காலத்தில் சாதி பாகுபாடு கற்பிக்கவில்லை. செய்யும் தொழிலை அடிப்படையாக கொண்ட சாதி பிரிக்கப்பட்டது" என கேரள நடிகை ஒருவர் பேசினார்.
அதற்கு பதில் அளித்த பேசிய இயக்குநர் கரு. பழனியப்பன், "உங்கள் கழிவறையை கழுவியவர் எங்கே இருந்தார். அவரால் ஏன், அவருடைய சாதி பெயரை போட்டு கொள்ள முடியவில்லை. அங்குதான், பிரச்னை" என்றார்.
இந்த விவாதம், இந்தியாவின் முற்போக்கு மாநிலங்களில் ஒன்றாக கருதப்படும் கேரளாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள அடிப்படை வேறுபாடுகளை போட்டு உடைத்தது. முற்போக்கு சமூகமாக காட்டப்படும் இடதுசாரி இயக்கங்கள் ஆண்ட கேரளாவில் இன்னும் சாதி பெயரை பயன்படுத்துகிறார்கள், ஆனால், சாதி எதிர்ப்பை முன்னிறுத்தும் திராவிட இயக்கங்கள் ஆண்டு வரும் தமிழ்நாட்டில் அதை போட மறுக்கிறார்கள்.
சாதி எதிர்ப்புக்காக போராடிய திராவிட இயக்கங்கள்:
இதற்கான காரணம் என்ன என அனைவரின் மனதிலும் எழலாம். அதற்கான முக்கிய காரணம், அங்கும் இங்கும் இயங்கிய, இயங்கி வரும் சமூக, அரசியல் இயக்கங்கள்தான்.
பிறப்பிலேயே உயர்வு, தாழ்வை கற்பிக்கும் சாதியை எதிர்த்து நூற்றாண்டு காலம் போராடிய இயக்கம் திராவிட இயக்கம். நாட்டில் வேறு எந்த சமூக இயக்கமும் இவ்வளவு ஆண்டு காலம், சாதியற்ற சமூகத்தை நோக்கி போராடியதில்லை. சுதந்திரத்திற்காக போராடிய காங்கிரஸ், வர்க்க போராட்டத்தை முன்னிறுத்தும் இடதுசாரி இயக்கங்கள் தற்போது தொய்வை சந்தித்த போதிலும், திராவிட இயக்கங்கள் தேர்தல் அரசியலில் தொடர் ஆதிக்கத்தை செலுத்தி வருவதற்கு முக்கிய காரணம், அடிப்படை பிரச்னையை தீர்க்க முற்பட்டதுதான். தீர்க்க முற்படுவதுதான்.
நீதி கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து சாதிக்கு எதிராக தொடர்ந்து இயங்கி வரும் திராவிட இயக்கங்கள், அதற்காக பல்வேறு தளங்களில் இயங்கியுள்ளது. சமூக இயக்கமாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடங்கி, தற்போது, ஆட்சி நிர்வாகத்தில் அதற்கான திட்டங்களை வகுப்பது வரை நீண்ட வரலாறு கொண்டது திராவிட இயக்கத்தின் சாதி எதிர்ப்பு போராட்டம்.
டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அல்ல... முத்துலெட்சுமி தான்:
சாதிக்கு எதிராக தொடர்ந்து இயங்கி வந்தாலும், திராவிட இயக்கங்களுக்கு எதிராகவும் விமர்சனங்கள் இல்லாமல் இல்லை. திராவிட இயக்கத்தின் போராட்டம் இடைநிலை சாதிகளையே அதிகார வர்க்கத்திற்கு கொண்டு சேர்த்ததாகவும் பட்டியலின மக்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்க மறுத்துவிட்டதாகவும் விமர்சனங்கள் வருகின்றன.
இச்சூழலில், பிரபல தமிழ் நாளிதழில் வெளியான தமிழ்நாடு அரசின் விளம்பரம் ஒன்று சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது. தலைவர்களின் சிலைகள் திறப்பு விழா தொடர்பான அந்த விளம்பரத்தில், தலைவர் ஒருவரின் பெயருக்கு பின்னால் சாதி பெயர் இடம்பெற்றது விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் பெயருக்கு பின்னால் இல்லாத சாதி பெயர், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் பெயருக்கு பின்னால் இல்லாத சாதி பெயர், டாக்டர் முத்துலெட்சுமி பெயருக்கு பின்னாள் மட்டும் இடம்பெற்றிருக்கிறது.
தேவதாசி முறைக்கு தடை விதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டத்திற்கு முக்கிய காரணமாக இருந்தவர் டாக்டர் முத்துலெட்சுமி. அவரின் பெயருக்கு பின்னால், ரெட்டி இடம்பெற்றிருப்பது ஏன் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட ஜாதியை அடையாளப்படுத்தும் வகையில் தெருக்களுக்கு பெயர் வைத்திருந்தால் அதை மாற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. தெருக்களுக்கே சாதி பெயரை அகற்றி வரும் சூழலில், தலைவர்களுக்கு பின்னால் மட்டும் ஏன் சாதி பெயர் சேர்க்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
முத்துலெட்சுமி ரெட்டி என காலம்காலமாக பயன்படுத்தி வந்தாலும், பழைமைவாதத்தை விடுத்து மாற்றத்தை விதைப்பதுதானே முற்போக்கு சமூகத்தை நோக்கிய பயணமாக இருக்க முடியும். வ.உ. சிதம்பரம் பிள்ளை, வ.உ. சிதம்பரனாராக இருக்கும்போது, டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மட்டும் ஏன் முத்துலெட்சுமியாக மட்டும் இருக்க கூடாது? என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.