Ayudha Puja 2023 : ‘சரஸ்வதி, விநாயகர் படங்களுடன் இயேசுநாதர் படத்திற்கும் பூஜை’ இது தமிழ்நாட்டில் மட்டும்தான் நடக்கும்..!
மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக சரஸ்வதி, விநாயகர், முருகன் படங்களோடு சேர்த்து இயேசுநாதர் படத்தையும் வைத்து பூஜை நடத்தப்பட்டது
கரூரில் களைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக சரஸ்வதி, விநாயகர், முருகன் படங்களோடு இயேசு கிறிஸ்து படத்தையும் வைத்து பூஜை நடத்தப்பட்டுள்ளது. மத நல்லிணக்கத்தை மேலும் இறுக பற்றச் செய்யும் விதமாக இந்த செயல்பாடு அமைந்துள்ளது என பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இன்று ஆயுத பூஜை தமிழ்நாட்டில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தங்களின் வீடுகளை சுத்தம் செய்தும் வாகனங்கள் பொருட்களுக்கு மாலை, பொட்டு அணிவித்தும் சாமி படங்களை வைத்து படையலிட்டும் மக்கள் விழாவை சிறப்பான முறையில் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், கரூரில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜையை முன்னிட்டு, இன்று தொழிற்சாலைகளில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. கரூர் அடுத்த ஆத்தூர் சிட்கோ தொழில்பேட்டையில் உள்ள பல்வேறு ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில், ஆயுதபூஜையை முன்னிட்டு துாய்மைப்படுத்தி, சாணத்தால் மெழுகி, வண்ணச்சாந்து பூசி, மங்களகோலமிட்டு, வாழைக்கன்று, மாவிலை தோரணங்கள் கட்டி, மலர்மாலைகளை சூட்டி அழகுபடுத்தினர்.
குறிப்பாக அங்குள்ள தனியார் ஜவுளி ஏற்றுமதி தொழிற்சாலை ஒன்றில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக சரஸ்வதி, விநாயகர், முருகன் படங்களுடன் இயேசு கிறிஸ்துவின் படத்தை வைத்து பூஜை செய்தது பலரையும் ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக தமிழ்நாடு எப்போதும் விளங்கி வரும் நிலையில், இந்த நிகழ்வை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கோயில் திருவிழாக்கள் நடைபெறும் பல்வேறு இடங்களில் இசுலாமியர்களும் கிறிஸ்துவர்களும் விழாவிற்கு வரும் இந்துக்களுக்கு நீர் மோர் கொடுப்பது, அன்னதானம் வழங்குவது என்று பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். பழனி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை செய்யும் பகதர்களுக்கு வழிநெடுகிலும் உணவும் தண்ணீரும் உறைவிடமும் வழங்குவது இசுலாமியர்களும் கிறிஸ்துவர்களும்தான். அதே மாதிரி, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அம்மன் கோயில்களுக்கு இசுலாமியர்கள் வரிசை எடுத்துக் கொண்டு விழாவை சிறப்பிக்கின்றனர். இந்துக்களும் கிறிஸ்துவர்களும் இசுலாமியர்களும் சகோதரர்களாக ஒரு தாய் வயிற்று பிள்ளைகளாக தமிழ்நாட்டில் பழகி வரும் நிலையில், அந்த நல்லிணக்கத்தை கெடுக்கும் நோக்கோடு சில அமைப்புகள் தற்போது செயல்பட தொடங்கியுள்ள நிலையில், அவர்களுக்கெல்லாம் பதிலடி தரும்படியாக இந்து தெய்வங்களோடு இயேசு கிறிஸ்து புகைப்படத்தையும் வைத்து பூஜை செய்த நிகழ்வு அமைந்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தேங்காய், பழம், பொரி, சுண்டல் படையலிட்டு தொழிலுக்கு நன்றி தெரிவிக்கும் பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து நிறுவனத்தின் உரிமையாளர்கள் தங்களது ஊழியர்களுக்கும், அவர்களது குழந்தைகளுக்கும் சுவாமிக்கு படையலிட்ட பொரி, சுண்டல் பிரசாதங்களை வழங்கி வருகின்றனர். இந்த ஒரு இடம் மட்டுமின்றி இன்னும் பல்வேறு இந்து குடும்பங்களிலும் மாற்று மத தெய்வ புகைப்படங்களையும் வைத்து வழிபட்டு மத நல்லிணக்கத்தை நிலைநாட்டி வருகின்றனர்.