Avvai Natarajan: அரசு மரியாதையுடன் நடைபெற்ற அவ்வை நடராசனின் இறுதிச்சடங்கு: அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்பு
மயிலாப்பூர் மைதானத்துக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உடலுக்கு காவல் துறையினர் மரியாதை செலுத்தினர்.
அவ்வை நடராஜனின் இறுதிச்சடங்கில் அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார்.
மறைந்த தமிழ் அறிஞர் அவ்வை நடராசனுக்கு காவல் துறை மரியாதையுடன் இறு அஞ்சலி செலுத்தப்பட்டது.
பிரபல தமிழ் அறிஞர் அவ்வை நடராசன் நேற்று (நவர்.22) காலமானார். 85 வயது நிரம்பிய அவ்வை நடராசன் தமிழுக்கு தான் ஆற்றிய சேவைக்காக கலைமாமணி, பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார்.
முன்னதாக மயிலாப்பூர் மைதானத்துக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உடலுக்கு காவல் துறையினர் மரியாதை செலுத்தினர்.
அவ்வை நடராசனுக்கு முன்னதாக இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க,ஸ்டாலின், “சிறந்த தமிழறிஞர் ஒளவை நடராசன் (87) வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்திய செய்தி அறிந்து மிகவும் வேதனையுற்றேன்; எண்ணற்ற நூல்களையும், பல நூறு மாணாக்கர்களையும் நம்மிடம் விட்டுச் சென்றுள்ள பெருந்தகை ஔவை நடராசனின் மறைவு தமிழ்த்துறையினர்க்கும், கல்விப்புலத்தார்க்கும் பேரிழப்பாகும்" எனத் தெரிவித்திருந்தார்.
மூத்த தமிழறிஞர் ஔவை நடராசன் அவர்களுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் ஆணையிட்டுள்ளார். pic.twitter.com/bC9uqgebG7
— CMOTamilNadu (@CMOTamilnadu) November 22, 2022
இந்நிலையில், அரசு சார்பாக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவ்வை நடராசனின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்.
கல்வியாளரான அவ்வை நடராசன் மதுரை தியாகராஜா கல்லூரியில் தமிழில் முதுகலை பட்டம் பெற்றார். பின்னர், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சங்க இலக்கியத்தில் ‘பெயரிடு மரபு’ எனும் தலைப்பில் ஆய்வு செய்து 1958ஆம் ஆண்டு ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார். பின்னர், சங்க காலப் புலமை செவ்வியர் எனும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
தமிழ் மொழியில் வித்தகராக இருந்த அவ்வை நடராசன் மதுரை, தியாகராஜர் கல்லூரி, தஞ்சையில் உள்ள மன்னர் சரபோஜி அரசுக்கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார். மேலும், டெல்லியில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்திலும் செய்தி வாசிப்பாளர், அறிவிப்பாளராக பணியாற்றியுள்ளார்.
அவரது திறமையைக் கண்டு வியந்த அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., அவ்வை நடராசனை தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் துணை இயக்குநராக பணியமர்த்தினார். சுமார் 9 ஆண்டுகள் அந்தப் பணியில் இருந்த அவ்வை நடராசன் பின்னர் 1984 முதல் 1992ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறையின் செயலாளராக பணியாற்றியுள்ளார்.
ஐ.ஏ.எஸ். அலுவலராக இல்லாமல் தமிழக அரசின் செயலாளராக பணியாற்றிய ஒரே நபர் அவ்வை நடராசன் ஆவார். பின்னர், 1992ஆம் ஆண்டு முதல் 1995ஆம் ஆண்டு வரையில் தஞ்சை தமிழ் பல்கலைகழகத்தின் துணைவேந்தராக பொறுப்பு வகித்தார். 2014ஆம் ஆண்டு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் துணைத் தலைவராக பொறுப்பு வகித்துள்ளார்.
சிறந்த பேச்சாளரான அவ்வை நடராசனின் உரைகளில் இருந்து பல்வேறு உரைகள் நூல்களாக வெளிவந்துள்ளன. தமிழ் மொழிக்காக இவர் ஆற்றிய சேவையை பாராட்டி நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவால் தமிழ் அறிஞர்களும், இலக்கியவாதிகளும் வேதனை அடைந்துள்ளனர்.