Madurai Couple | மதுரை ஜோடிகள் திருமண விவகாரம் - ஊழியர்கள் சஸ்பெண்ட், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள உத்தரவு!
"ஸ்பைஸ் ஜெட் விமானம் திருமணத்திற்காக பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை" என மதுரை விமான நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்
மதுரை ஜோடிகள் விமானத்தில் திருமணம் செய்துகொண்ட விவகாரத்தில் மத்திய விமான போக்குவரத்துத்துறை இயக்குநரகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது மேலும் அப்போது பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் அனைவரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று பல திருமணங்கள் அவசரமாக நடைபெற்று முடிந்தன. ஆனால் நேற்று நடைபெற்ற திருமணங்களிலேயே அதிகப்படியான கவனத்தை ஈர்த்தது மதுரை ஜோடிகள் விமானத்தில் திருமணம் செய்துகொண்ட நிகழ்வுதான்.
மதுரை கோரிப்பாளையத்தில் சேர்ந்த மரக்கடை உரிமையாளர் மகன் ராகேஷ். மதுரை தொழிலதிபர் மகள் தீக்ஷனா. இந்த இருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில், தங்களது திருமணத்தை வித்தியாசமான முறையில் செய்ய நினைத்த இந்த ஜோடிகள், விமானம் நடுவானில் பறக்கும்போது தாலி கட்டி திருமணம் செய்துகொண்டனர். விமானத்தில் நடைபெற்ற அந்த திருமணத்தின் வீடியோ பதிவுகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. மீனாட்சி ராகேஷ் - தீக்ஷனா தம்பதியினருடன், அவர்கள் குடும்பத்தை சேர்ந்த சுமார் 161 உறவினர்களும் இந்த திருமண விழாவில் பங்கேற்றிருந்தனர். அதில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பது அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது.
தமிழகத்தில் தற்போது கட்டுப்பாடுகள் நிலவும் சூழலில் 50 நபர்கள் மட்டுமே திருமண நிகழ்வுகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது, அதனால் மதுரை ஜோடியின் திருமண நிகழ்வில் பல்வேறு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பும் விவகாரமாக மாறியுள்ளது. இது ஒரு தவறான முன்னுதாரணமாக மாறிவிடும் என பலர் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் தான் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள மத்திய போக்குவரத்துத்துறை முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மேலும் திருமண நிகழ்வின்போது கொரோனா முன்னெச்சரிக்கை விதிகளை பின்பற்றாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
மதுரை விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் அளித்துள்ள தகவலின் படி"ஸ்பைஸ் ஜெட் விமானம் திருமணத்திற்காக பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை" என தெரிவித்துள்ளார். ஸ்பைஸ் ஜெட் விமானம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி"கொரோனா நோய் தோற்று பரவலை தடுக்க அணைத்து விதமான நெறிமுறைகளும் பயணிகளிடம் விமான ஊழியர்கள் மூலம் விவரிக்கப்பட்டது. மேலும் விமான போக்குவரத்து துறை நெறிமுறைகளின் படி வீடியோ, போட்டோ எடுக்க கட்டுப்பாடுகள் இருப்பதும் அறிவுறுத்தப்பட்டது" என குறிப்பிட்டுள்ளது.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் அனைவரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.