Jayalalithaa Death Case: “நடக்கவே முடியல; ஓய்வெடுக்க மறுத்தார்” - ஜெயலலிதா குறித்து அப்போலோ மருத்துவர் பரபரப்பு வாக்குமூலம்
அவருடைய மரணத்தில் சில சந்தேகங்கள் இருப்பதாக சில கேள்வி எழுப்பியதை தொடர்ந்து இது தொடர்பாக விசாரிக்க ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் விசாரணையை தொடங்கி உள்ளது. விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்ததாக ஆறுமுகசாமி ஆணையத்திடம் அப்போலோ மருத்துவர் பாபு மனோகர் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “2வது முறையாக ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்கும் முந்தைய நாள் அவரை சந்தித்தேன். அவரால் மற்றொருவர் துணையில்லாமல் நடக்க முடியாத சூழல் நிலவியது. தலைசுற்றல், மயக்கம் அவருக்கு இருந்தது. ஒரு நாளைக்கு 16 மணிநேரம் வேலை இருப்பதாக அவர் தெரிவித்தார். ஓய்வெடுக்க பரிந்துரைத்தேன். ஆனால் அவர் கேட்கவில்லை. ஓய்வெடுக்க மறுத்தார். சில மருந்துகளை பரிந்துரைத்ததோடு சில உடற்பயிற்சிகளையும் செய்யுமாறு பரிந்துரைத்தேன்” என வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார். அவருடைய மரணத்தில் சில சந்தேகங்கள் இருப்பதாக சில கேள்வி எழுப்பியதை தொடர்ந்து இது தொடர்பாக விசாரிக்க ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. இது ஒய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், சசிகலா மற்றும் அவருடைய உறவினர்கள் உள்பட பலரையும் விசாரித்தது. எனினும் தற்போது வரை இந்த ஆணையம் விசாரணையை முடிக்கவில்லை. இந்த ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு கொண்டு வந்தது.
அதனை அடுத்து, அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தது. அதில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தது. அந்த வழக்கில், ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் 2 ஆண்டுகள் இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து மருத்துவ குழு அமைத்து விசாரணையை நடத்த எய்ம்ஸ் இயக்குனரகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி எய்ம்ஸ் மருத்துவர் நிகில் டாண்டன் தலைமையில் மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டது. இந்தச் சூழலில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து சசிகலா தரப்பு, அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்திடம் நீதிபதி ஆறுமுகசாமி இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இதில் காணொளி வாயிலாக எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் விசாரணை முடிவடைந்து 3-4 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்