எடப்பாடி யார் பேச்சையும் கேட்கல – திமுகவில் இணைந்ததும் பாஜக ப்ளானை போட்டு உடைத்த அன்வர் ராஜா
அதிமுகவில் இருந்து விலகி அன்வர் ராஜா திமுகவில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார்.

அதிமுகவில் இருந்து விலகி அன்வர் ராஜா திமுகவில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அன்வர் ராஜா, ”திமுக மீண்டும் வெல்ல வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். பாஜகவுடன் ஜெயலலிதா கூட்டணி வைத்ததற்கும் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்ததற்கும் வித்தியாசம் உள்ளது. பாஜகவின் கையில் அதிமுக சிக்கியுள்ளது. அண்ணாவின் கொள்கைக்கு எதிராக அதிமுக உள்ளது. அதிமுகவை அழித்துவிட்டு திமுகவை எதிர்க்க வேண்டும் எனபதுதான் பாஜகவின் திட்டம். ஒரு இடத்தில் கூட பழனிசாமி முதல்வர் என அமித்ஷா சொல்லவில்லை. தாம் தான் முதலமைச்சர் என எடப்பாடி பழனிசாமி சொல்லிக்கொண்டே இருக்கிறார். ட்ரம்ப் தாம் தான் போரை நிறுத்தினேன் என கூறிக்கொண்டே இருப்பது போல் எடப்பாடியும் தாம் தான் முதல்வர் என கூறிக்கொண்டு இருக்கிறார். மக்கள் நம்ப தயாராக இல்லை. தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகளை உடைத்தது போல் அதிமுகவையும் அழிக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் எண்ணம். 2026 தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது பாஜகவின் நோக்கம் இல்லை.
என் மனதில் உள்ள ஆதங்கத்தை எல்லாம் தலைமைக்கு சொல்லிப்பார்த்தேன். அதிமுக கேட்கவில்லை. அதிமுக தலைவர்கள் பலர் அதிருப்தியில் உள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் உட்பட யார் பேச்சையும் எடப்பாடி பழனிசாமி கேட்கமாட்டார். 7 முன்னாள் அமைச்சர்கள் சேர்ந்து எடப்பாடியிடம் எடுத்துரைத்தோம். அவர் கேட்கவில்லை. அதிமுகவை சீரழிப்பதற்குதான் பாஜக கூட்டணி வைத்துள்ளது.
இந்தியாவில் வலிமையான தலைவர்களில் ஒருவர் ஸ்டாலின். ஸ்டாலினுக்கு இணையான தலைவர் அதிமுகவில் இல்லை. இனி வருவார்கள் என்பதும் சந்தேகம் தான்.
இந்தியாவுக்கே முன்னுதாரணமாக திகழ்பவர் ஸ்டாலின். நான் சந்தர்ப்பவாதி இல்லை. கொள்கைவாதி. தலைவன் மீது நம்பிக்கை வைத்துதான் தமிழ்நாட்டில் மக்கள் வாக்களித்து வருகிறார்கள். பாஜகவுக்கான எதிர்ப்பை கூர்மைப்படுத்தியவர் ஸ்டாலின் தான்” எனத் தெரிவித்தார்.





















